ISL Banglore
ISL Banglore

ISL Banglore – ஐ.எஸ்.எல்., தொடரின் பைனலுக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக முன்னேறியது பெங்களூரு அணி. நேற்று நடந்த இரண்டாவது சுற்று அரையிறுதியில் 3-0 என வடகிழக்கு அணியை வென்றது.

இந்தியாவில் நடக்கும் ஐ.எஸ்.எல்., தொடரின் ஐந்தாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

முதல் சுற்று அரையிறுதி போட்டிகளில் வடகிழக்கு யுனைடெட் அணி 2-1 என பெங்களூருவை வென்றது. கோவா அணி 5-1 என மும்பையை வீழ்த்தியது.

இரண்டாவது சுற்று அரையிறுதியில் பெங்களூரு, வடகிழக்கு அணிகள் மீண்டும் மோதின. 9வது நிமிடத்தில் ஜுவான் மாசியா அடித்த பந்தை பெங்களூரு கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து தடுத்தார்.

23வது நிமிடம் சக வீரர் தந்த பந்தை பெங்களூருவின் மிக்கு தலையால் முட்டி கோலாக்க முயன்றார். பந்து ‘போஸ்ட்’ வெளியே சென்றது.

தொடர்ந்து 25, 33வது நிமிடங்களில் மிக்கு எடுத்த முயற்சிகள் வீணாகின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமனில் முடிந்தது.

இரண்டாவது பாதியில் வடகிழக்கு அணிக்கு ‘பிரீ கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதை டிரயடிஸ் கோல் போஸ்ட் மேலாக அடித்து ஏமாற்றினார்.

68 வது நிமிடம் பெங்களூரு அணிக்கு கோல் அடிக்க எளிய வாய்ப்பு வந்தது. இதை ஜுவானன் நழுவவிட்டார்.

72வது நிமிடத்தில் உடாண்டா சிங் கொடுத்த பந்தை அப்படியே இடது காலால் தட்டி கோலாக மாற்றினார் மிக்கு, பெங்களூரு அணி 1-0 என முன்னிலை பெற்றது. 87 வது நிமிடத்தில் உடாண்டா அடித்த பந்து வடகிழக்கு அணியின் கோல் போஸ்டில் பட்டுத்திரும்பியது.

இதை அங்கிருந்த டெல்காடோ கோலாக மாற்றினார். ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் சுனில் செத்ரி தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். முடிவில் பெங்களூரு அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் வடகிழக்கு அணி வென்றிருந்தது. ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் 4-2 என முன்னிலை பெற்ற பெங்களூரு அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு (17 ம் தேதி, மும்பை) முன்னேறியது.

பெங்களூரு வீரர் மிக்கு முதல் கோல் அடித்தார். இது இத்தொடரில் அடிக்கப்பட்ட 250 வது கோலாக அமைந்தது. இதுவரை 252 கோல்கள் அடிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here