முறையாக வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று வருமான வரித்துறையினர் விருது ஒன்றை வழங்கியுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கோலிவுட் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி இப்படத்திற்கான பூஜை நடைபெற உள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் 150 கோடி சம்பளமாக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் தமிழ் திரை உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த்திற்கு இன்று வருமானவரி துறை சார்பில் விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறை தினமான இன்று வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த விருதை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவ்விருதிணை பெற்றுள்ளார்.

மேலும் இந்த விழாவில் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் “பிரதமர் மோடியின் தொடர் முயற்சியால், பொதுமக்கள் முறையாக வரி செலுத்த முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பின் அனைவரும் கண்டிப்பாக அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், வரி செலுத்தாவிட்டால் நாம் இருப்பதையும் இழந்துவிடுவோம் என பேசியுள்ளார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.