"I will not withdraw what Rajiv Gandhi talked about murder": Seeman retaliates!

சென்னை: ராஜீவ் காந்தி கொலை குறித்து பேசிய தனது கருத்தை, திரும்பப் பெற மாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக, காங்கிரஸ் கட்சி சார்பில் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், காங்கிரஸ் கட்சியினர் சீமானுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதை தொடர்ந்து, சீமான் மீது காங்கிரஸ் கட்சியினர் கொடுத்த புகாரின் பேரில், போலீசாரும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று சீமான் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “ராஜீவ்காந்தி கொலை வழக்கை கடந்த 28 ஆண்டுகளாக பேசிக் கொண்டு விடுதலைப்புலிகளை அழித்து ஒழித்துவிட்டதாக கூறுகின்றனர்.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இது தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட அவமானம். 7 பேர் விடுதலைக்கு எவ்வளவு முட்டுக்கட்டைகள்? என கூறினார்.

மேலும் ராஜீவ்காந்தி அனுப்பி வைத்த அமைதிப்படை இலங்கையில் என்ன செய்தது என்பதை என்னுடன் விவாதிக்க தயாரா? என கேள்வி எழுப்பினார். ராஜீவ்காந்தியை கொன்று விட்டதாக கூறி தான் போர் செய்து லட்சக்கணக்கான மக்களை கொன்றார்கள்… இலங்கையில் போர் நடத்தியது காங்கிரஸ் அரசு தான். காங்கிரசுடன் திமுக நின்றதை யாராவது மறுக்க முடியுமா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய சீமான், “என் மீது இது போன்ற லட்சக்கணக்கான வழக்குகள் இருக்கிறது. அதற்காக ராஜீவ் காந்தி குறித்து பேசியதை நான் திரும்ப பெறமாட்டேன்.!! ” என்று தெரிவித்தார்.

மேலும் நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து இருப்பதற்கு ஜி.எஸ்.டி. தான் காரணம். எல்லா திட்டங்களையும் இந்த 2 கட்சிகள் தான் கொண்டு வந்தது. கதர் கட்டிய பா.ஜ.க., காவி கட்டிய காங்கிரஸ், இவ்விரு கட்சிகளுக்கும் வித்தியாசம் கிடையாது. சீன அதிபர் வந்தபோது, தமிழரின் பாரம்பரிய உடையை பிரதமர் மோடி அணிந்தது மகிழ்ச்சி. இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.