High Court Teachers Strike
High Court Teachers Strike

High Court Teachers Strike – சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தி வரும் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தங்களது கோரிக்கைகளை அரசு செவிசாய்க்கவில்லை என்று கூறி, வேலைநிறுத்த போராட்டத்தை கடந்த 22-ஆம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.

அதைத்தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிக்கையில், ‘வேலைநிறுத்த போராட்டம், போராட்டங்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்பது, ஆர்ப்பாட்டம், கிளர்ச்சியில் ஈடுபட்டு

அரசு அலுவலகங்களின் இயல்பு செயல்பாட்டை பாதிக்கச் செய்வது ஆகியவை தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஒழுங்கு விதிகளின் 20, 22 மற்றும் 22ஏ ஆகிய பிரிவுகளை மீறுவதாகும்.

எனவே அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது”.

மேலும் வரும் 25-ம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி மாணவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.