HBD Iconic Thala AJITH :
HBD Iconic Thala AJITH :

HBD Iconic Thala AJITH : ’அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும்.

இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். 25 ஆண்டுகள்.. 58 படங்களில் இன்று தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக உருமாறியிருக்கிறார்.

1993-ல் தமிழில் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமான அஜித்துக்கு முதல் படத்திலேயே தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்துவிடவில்லை.

கூடவே இவருடைய தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை என்பதுபோன்ற விமர்சனங்களும் எழுந்தன.

எனினும் இதே துறையில் நிச்சயம் ஒருநாள் சாதித்து காட்டுவேன் என வைராக்கியத்துடன் போராடிய அஜித்துக்கு அடுத்து வெளியான ’ஆசை’ விசிட்டிங் கார்டாக அமைந்தது.

ஆசை, காதல் கோட்டை என கொஞ்ச கொஞ்சமாக முன்னேறிய அஜித்துக்கு காதல் மன்னன், வாலி போன்ற படங்கள் மாபெரும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தன.

இந்த நடிகருக்குள் இப்படியொரு திறமையா என விமர்சகர்கள் அவரை கொண்டாடித் தீர்த்தார்கள். இன்னொரு பக்கம் தமிழகத்தில் இவருக்கென தனி ரசிகர் வட்டாரமும் உருவாக தொடங்கியது.

தொடர்ந்து தீனா, சிட்டிசன் என அடுத்தடுத்து பல வெற்றிகளைக் கொடுத்த அஜித், அதன்மூலம் எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் தமிழ் சினிமாவின் அடுத்த வசூல் சக்ரவர்த்தியாக உருவெடுத்தார்.

எனினும் அதே வேகத்தில் அஜித்தின் திரை பயணம் சறுக்கலையும் சந்தித்தது. தொடர் தோல்விகள், கார் ரேஸிங்கில் கூடுதல் கவனம், அதில் ஏற்பட்ட விபத்தில் உடலில் 23 இடங்களில் ஆபரேஷன்,

அதனால் உடல் எடை அதிகரித்து பொலிவிழந்த தோற்றத்துக்கு மாறியது என 2003 முதல் 2006 வரையிலான காலக்கட்டம் அஜித்துக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் சோதனை காலமாக அமைந்தது.

எனினும் ஒவ்வொரு முறை வீழும் போதும் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்து முன்பிருந்ததை விட பெரிய ஹிட் கொடுப்பது அஜித்தின் ஸ்டைல்.

அந்தவகையில் 2007-ம் ஆண்டு பில்லா படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்து தான் விட்டுச்சென்ற சிம்மாசனத்தில் மீண்டும் ஒய்யாரமாக ஏறி அமர்ந்தார் அஜித்.

ஆரம்பம் முதலே அஜித்தை பிடிக்க அவரது ரசிகர்கள் சொல்லும் காரணங்களில் முதன்மையானது அவருடைய தன்னம்பிக்கையும் துணிச்சலும்.

ரசிகர்களின் எதிர்கால நலனை மனதில் கருதி நாடெங்கும் விரிந்துக் கிடக்கும் தன்னுடைய ரசிகர் படையைக் கொண்ட மன்றங்களை கலைத்தது,

கலைஞர் பாராட்டு விழாவில் தன்னை வர்புறுத்தி வர சொன்னதாக பேசியது என படங்களை விடவும் அஜித்தின் இந்த துணிச்சலும் தன்னம்பிக்கையுமே அவருக்கான ரசிகர் படையைக் கட்டமைத்தது.

நடிப்பைத் தாண்டி விளையாட்டுத் துறையிலும் சாம்பியனாகவே அஜித் வலம்வருகிறார்.

முறைப்படி கார் பந்தயத்தில் பங்கேற்ற அவர், 2002-ம் ஆண்டு இந்திய அளவில் நடைபெற்ற ஃபார்முலா மாருதி சாம்பியன்ஷிப் போட்டியில் 4-ம் இடம் பிடித்து அசத்தினார்.

அதேபோல் சென்னை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா குழுவின் ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார்.

அஜித்தின் வழிகாட்டுதலில் தக்‌ஷா அணியின் ஆளில்லா விமானம் சர்வதேச அளவில் பல போட்டிகளில் பங்கேற்று நீண்டநேரம் வெற்றிகரமாக பறந்து சாதனை படைத்தது.

திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி அறிமுகமாகி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித்.

இன்று மட்டுமல்ல தமிழ் சினிமா இருக்கும் வரை அதில் அஜித் எனும் தன்னம்பிக்கை நாயகனின் பெயர் ஒலித்துகொண்டே இருக்கும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.