Happy Birthday Trisha
Happy Birthday Trisha

Happy Birthday Trisha : 1999-ம் ஆண்டு மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் போன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற த்ரிஷா ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக கூட்டத்தில் வந்துபோகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன்பின் லேசா லேசா, மௌனம் பேசியதே படங்களின் மூலம் வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமான த்ரிஷா சாமி,

கில்லி என அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உயர்ந்தார்.

ரஜினி, கமல், விஜய், அஜித்தில் தொடங்கி சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் அத்தனை பேருடனும் நடித்த ஒரே நடிகை எனும் சிறப்பு அந்தஸ்து த்ரிஷா வசம் உள்ளது.

ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற த்ரிஷாவின் நீண்ட நாள் கனவும் அண்மையில் வெளியான பேட்ட-யின் மூலம் நிறைவேறியது.

அறிமுகமான ஆண்டில் இருந்து சராசரியாக வருடத்திற்கு நான்கு படங்கள் என நடித்துவந்த த்ரிஷாவின் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான தூங்காவனம் 50-வது படமாக வெளிவந்தது.

ஒரு நாயகி 50 படங்களில் நடிப்பது என்பதே தமிழ் சினிமாவில் ஆச்சரியமான ஒரு விஷயம்.

ஆனால் 50வது படம் நடிக்கும்போதும் த்ரிஷா முன்னணி நாயகியாகவே இருந்தது கூடுதல் ஆச்சரியமான ஒன்றாகும்.

எந்தவொரு நாயகிக்கும் பெயர் சொல்லும் ஒரு படம் அவர்களுடையே கேரியரையே அலங்கரிக்கும்.

அந்தவகையில் த்ரிஷாவின் கேரியரில் ஒரு மைல்கல் படமாக இன்று வரை கொண்டாடப்படும் ஒரு படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

வசன உச்சரிப்பில் தொடங்கி, ஹேர் ஸ்டைல், புடவை என விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி செய்தது அனைத்தும் அன்றைய தேதியில் டிரெண்டாக மாறியது.

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட ஜெஸ்ஸி கதாபாத்திரத்துக்கென ரசிகர்கள் மனதில் தனி இடம் இருக்கும்.

அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் விண்ணைத்தாண்டி வருவாயா அளவு பேர் சொல்லும் ஒரு படம் இல்லையே என வருத்தப்பட்ட அவருடைய ரசிகர்களுக்கு கடந்த ஆண்டு வெளியான 96 மூலம் மிகப்பெரிய கம் பேக் கொடுத்திருக்கிறார்.

இனி த்ரிஷாவின் வாழ்நாள் கதாபாத்திரம் ஜெஸ்ஸியா ஜானுவா என விவாதிக்கும் அளவு ஜானுவின் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்திருக்கிறார் த்ரிஷா.

நான்கைந்து படங்களுடன் காணாமல் போகும் நாயகிகளுக்கு மத்தியில் கடந்த 17 வருடங்களாக தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியாக அதே வசீகரத்துடன் வலம்வரும் த்ரிஷா,

 

தன் வெற்றிப்பயணத்தின் மூலம் தமிழ் திரை நாயகிகளுக்கான இலக்கணத்தையும் மாற்றியமைத்திருக்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.