For politics, Vijay follows the 'V' sentiment
For politics, Vijay follows the 'V' sentiment

தற்போது தென்னிந்திய திரையுலகிலேயே சுமார் 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக உள்ள விஜய், பலரும் எடுக்க தயங்கும் ஒரு தைரியமான முடிவை மிக குறுகிய காலகட்டத்தில் எடுத்துள்ளார். அதாவது அரசியல் வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட உள்ளதால், திரையுலகில் இருந்து ஒரேயடியாக விலக முடிவு செய்துள்ளார்.

இதனால் தளபதி விஜய்யின் 69 ஆவது படமே இவரது கடைசி படமாக இருக்கும் என விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட போது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். தற்போது வரை விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள இவரது 69-ஆவது படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில், விஜய் மிகவும் பரபரப்பாக தன்னுடைய அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதற்கு ஏற்ப தளபதி விஜய்யின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பை சமீபத்தில் தளபதி விஜய் வெளியிட்ட நிலையில், இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

எப்படியும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்களுக்கு தேவையான குடிநீர், மொபைல் டாய்லெட், போன்ற அத்தியாவசிய தேவைகள் இடம்பெறும் வகையில் இந்த மாநாட்டின் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான களப்பணிகளில் தற்போது தளபதி விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். அவ்வப்போது பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் இந்த பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தளபதி விஜய், ஜோதிட நம்பிக்கையோடு தான் விக்கிரவாண்டி தொகுதியில் இந்த மாநாட்டை நடத்துகிறாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்காக இவர் கடைபிடிக்கும் ‘V’ சென்டிமென்ட்டை ஃபாலோ செய்வதாக கூறப்படுகிறது.

விஜய்யின் பெயர் ‘V’ என்கிற எழுத்தில் துவங்குவது போல், இவர் துவங்கி உள்ள கட்சிக்கும் ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைத்துள்ளனர். வெற்றி என்பது Victory என்கிற ஆங்கில வார்த்தையை குறிக்கிறது. தற்போது, முதல் முறையாக தன்னுடைய மாநாட்டை நடத்த தேர்வு செய்துள்ள விழுப்புரம் மாவட்டமும் ‘V’ என்கிற எழுத்தில் தான் துவங்குகிறது.

மேலும், விக்கிரவாண்டி தொகுதியும் ‘V’ என்கிற எழுத்தில் துவங்க இந்த மாநாடு நடைபெற உள்ள இடமும் வி-சாலை என கூறப்படுவதால், அடுத்தடுத்து விஜய் ‘V’ என்கிற சென்டிமென்டை ஃபாலோ செய்து தான் தன்னுடைய அரசியல் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறி வருகின்றனர்.

தளபதி விஜய்க்கு முன்னர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த மிகப்பெரிய ஆளுமையாக பார்க்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், அரசியல் ஜோதிட ஆலோசனையின் படி, ‘V’ என்கிற எழுத்தில் துவங்கும் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக கூறப்படுவது உண்டு.

எனவே அரசியலில் விஜயகாந்தை ஃபாலோ செய்துதான், விஜய் இந்த ‘V’ சென்டிமென்ட்-யை விடாமல் துரத்துகிறாரா? சில விமர்சகர்கள் தங்களின் கருத்தை முன் வைத்து வருகிறார்கள்.

விஜய்யை போல் திரையுலகில் ‘V’ சென்டிமென்ட்டை ஃபாலோ செய்து வருபவர் தான் அஜித். இவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, வியாழக்கிழமையில் திரைப்பட அப்டேட் வெளியிடுவது. திரைப்படங்கள் வெளியிடுவது மற்றும் ‘வி’ சென்டிமென்டில் வீரம், வேதாளம், விவேகம், விடாமுயற்சி என ‘V’ சென்டிமென்ட் படி பெயர் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. சினிமாவுக்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் சென்டிமென்ட் ரெம்ப முக்கியம் போல.!