EPS Speech in MBBS Sheet Function

கடந்த நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவின்படி நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்புக்கான அரசு ஆணையை வழங்கிய நிகழ்வில் முதல்வர் பழனிசாமி அவர்கள் பேசியதை பார்க்கலாம் வாங்க.

EPS Speech in MBBS Sheet Function : மருத்துவர் ஆகும் கனவுடன் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு, மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான ஆணையை பெற்றுள்ள அரசு பள்ளி மாணவர்களே, உங்கள் பிள்ளைகளின் சாதனையைக் கண்டு பெருமிதத்தோடும், மகிழ்ச்சியோடும் இங்கே அமர்ந்துள்ள பாசமிகு பெற்றோர்களே, உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளை முதலில் உரித்தாக்குகிறேன்.

 இந்த நாள் எனது வாழ்வில் ஒரு மகிழ்ச்சிகரமான நாள். தமிழக வரலாற்றில் ஒரு பொன்னாள். அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய நன்னாள். அரசுப் பள்ளியில் படித்தவன் என்ற முறையில் எனக்கு மிகுந்த மன நிறைவை ஏற்படுத்தியுள்ள திருநாள். இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும் என்பதில் எனக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி தரும் நாள்.

 மாண்புமிகு அம்மா அவர்களும், அம்மா அவர்களின் அரசும் கொள்கை அளவில் நீட் தேர்வினை தொடர்ந்து எதிர்த்து வருகின்றது.

 மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு நான் பலமுறை கடிதங்கள் எழுதியும், நேரில் சந்தித்தும், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க கேட்டுக் கொண்டுள்ளேன்.

அதுமட்டுமல்லாமல், சட்டப் போராட்டங்களை தொடர்ந்து எனது அரசு நடத்தி வருகின்றது. எனினும், மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி நீட் தேர்வு நடைபெற்று வருகின்றது.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர்வது மிகவும் குறைந்து விட்டது.

 அரசுப் பள்ளி மாணவர்கள் திறமையானவர்களாக இருந்த போதிலும், நீட் தேர்வினை எதிர்கொள்ளத் தேவையான வசதியும், வாய்ப்பும் மிகக் குறைவாக இருப்பதனால், வசதி வாய்ப்புள்ள பிற மாணவர்களுடன் போட்டியிட்டு இத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அதிக மதிப்பெண்கள் பெற இயலவில்லை.

 தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 8,41,251 ஆகும். இதில் 41 சதவிகிதம், அதாவது 3,44,485 மாணவர்கள் 3,054 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களே ஆகும். கடந்த ஆண்டு மருத்துவம் பயில வெறும் 6 மாணவர்கள் மட்டுமே தேர்வாயினர். இந்த நிலையை மாற்றிட வேண்டும் என நான் உறுதி கொண்டேன்.

 அரசுப் பள்ளிகளில் பயிலும் உங்களைப் போன்ற ஏழை எளிய மாணவர்களுக்கும் சமவாய்ப்பு அளித்து, உங்களுடைய மருத்துவக்கனவு லட்சியத்தை நிறைவேற்றிட, கடந்த மார்ச் மாதமே, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஒரு சட்டம் இயற்றப்படும் என சட்டப் பேரவை 110 விதியின் கீழ் நான் அறிவித்தேன்.

 இதை செயல்படுத்த, முதற்கட்டமாக மாண்புமிகு நீதியரசர் திரு. கலையரசன் அவர்கள் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் பரிந்துரையின்படி என்னுடைய 110 அறிவிப்பு இன்று பல தடைகளை தாண்டி, சட்டமாகி, ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கி உள்ளது.

 இதுவரை உங்களது குடும்பங்கள் எவ்வாறாக அடையாளப்படுத்தப்பட்டு இருந்தாலும், இனிமேல் உங்களுடைய குடும்பங்கள் மருத்துவர் குடும்பங்கள் என்றே அழைக்கப்படும்.

 தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு, மாநில ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவிகித இடங்களை முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் சட்டம், மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஒப்புதலுடன் 30.10.2020 அன்று இயற்றப்பட்டது.

 தமிழ்நாட்டில் மொத்தம் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 15 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும் மற்றும் 18 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.

 2011ஆம் ஆண்டில் மொத்தம் 1,945ஆக இருந்த மருத்துவப்படிப்பு இடங்கள், மாண்புமிகு அம்மா அவர்களின் சீரிய முயற்சியால், 2017 வரை 3,060 ஆக உயர்ந்தது. மாண்புமிகு அம்மா அவர்கள் அரசின் நடவடிக்கைகளினால் தற்போது இது 3,650 ஆக உயர்ந்து உள்ளது.

மாண்புமிகு அம்மா அரசின் வரலாற்று சாதனையாக 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் துவக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, 1,650 புதிய இடங்கள் 2021-22 கல்வி ஆண்டு முதல் உருவாக்கப்படும். ஆக மொத்தம் மாண்புமிகு அம்மா அரசால் 1990 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

 அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 227 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மூலம் 86 இடங்களும் என மொத்தம் 313 இடங்கள் நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு MBBS இடங்கள் கிடைக்கும்.

நான் முன்னரே சொன்னது போல் சென்ற ஆண்டு வெறும் 6 இடங்கள் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்தது. தற்போது 313 இடங்கள் கிடைத்துள்ளன.

 இதேபோன்று, அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மூலம் 12 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் மூலம் 80 இடங்களும், என மொத்தம் 92 இடங்கள் நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்கு MBBS இடங்கள் கிடைக்கும்.

 இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் படித்த மாணாக்கர்களுக்கு 7.5 சதவிகித முன்னுரிமை அடிப்படையின் கீழ், எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவ சேர்க்கையில் மொத்தம் 405 இடங்கள் கிடைக்கும்.

 மேலும், அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத் துறை பள்ளிகள் ஆகிய மாணவர்களின் ஏழ்மை
நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலையினை கருத்திற்கொண்டு, அவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் இதர செலவினங்களால் சுமை ஏதும் ஏற்படா வண்ணம், இச்செலவினங்களை வழங்குவதற்காக Post Matric கல்வி உதவித் தொகை மற்றும் இதர கல்வி உதவித் தொகை திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த உரிய உத்தரவினை பிறப்பித்துள்ளேன் என்பதையும் இந்த தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெகு தொலைவில் இருந்து வந்திருக்கும் மாணவர்களும், பெற்றோர்களும் கலந்தாய்வு முடிந்து பத்திரமாக வீடு திரும்ப கேட்டுக் கொள்கிறேன்.

 இந்த கலந்தாய்வை சிறப்புற நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்த மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.