YouTube video

Edappadi Palanisamy Reply to Opponent Party : அரசு பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் வெவ்வேறு சமூக பொருளாதார பின்னணியை கொண்டவர்கள்.

இவர்கள் கற்கும் பள்ளி, வளரும் வீட்டுச் சூழல், பெற்றோர் வருமானம் போன்றவற்றில் வேறுபாடுகள் உள்ளன. எனவே, இவர்களை சமநிலையில் வைத்து பார்ப்பது சமநீதிக்கு எதிரானது.

தமிழ்நாடு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் அதிகமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் அவர்களுக்கு உரிய அளவுக்கு மருத்துவ இடம் கிடைப்பதில்லை.

எனவே தான், அரசு பள்ளியில் படித்த நான், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தனியாக உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை உணர்வுப் பூர்வமாக உணர்ந்து, கடந்த 21.3.2020 அன்று சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவ படிப்பு பயில உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தேன்.

Edappadi Palanisamy Reply to Opponent Party

இது சம்பந்தமாக தீர ஆய்வு செய்து தமிழ்நாடு அரசுக்கு தனது பரிந்துரையை வழங்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.பி.கலையரசன் அவர்களின் தலைமையிலான ஆணையம் ஒன்றினை அமைத்து, அதன் பரிந்துரையின் அடிப்படையில் அமைச்சரவை ஒப்புதல் பெற்று, 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் ஒரு மனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக 18.9.2020 அன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, நான் கடந்த 5.10.2020 அன்று மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர், மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஆகியோருடன் மாண்புமிகு ஆளுநர் அவர்களை கொரோனா தொற்று நிலை பற்றி விவரிக்க நேரில் சந்தித்த பொழுது நீட் உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி கேட்டுக் கொண்டேன்.

தற்போதுள்ள மருத்துவ பட்டப்படிப்பு இடங்களில், இந்த 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்குவதால், ஏழை எளிய மாணவர்களுக்கு சம நீதி வழங்க இது வழிவகுக்கும் என்பதை உணர்ந்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இதற்கு விரைந்து ஒப்புதல் அளிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த உள் ஒதுக்கீட்டு சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டுமென அமைச்சர்கள் குழு, மாண்புமிகு ஆளுநர் அவர்களை 20.10.2020 அன்று நேரில் சந்தித்து வலியுறுத்தியபோது, இது குறித்து ஆய்வு செய்து விரைவாக முடிவு செய்வதாக மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உறுதியளித்துள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளில் 1,400 புதிய மருத்துவப் பட்டப் படிப்பு இடங்களை உயர்த்தியும், 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி, அதனால் கூடுதலாக 1,650 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்தும், ஆக மொத்தம் 3,050 மருத்துவ இடங்களை உருவாக்கிய மாண்புமிகு அம்மாவின் அரசை பார்த்து, நீட் தேர்வு என்ற விஷயத்தை இந்தியாவிற்கு அறிமுகம் செய்து மாணவர்களுக்கு துரோகம் இழைத்த எதிர் கட்சியினர், “ஆளுநருக்கு அழுத்தம் தரவில்லை” என்று கூறுவதற்கு எந்தவித அருகதையும் இல்லை.

ஏழை எளிய மாணவர்கள், குறிப்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்கவும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உள்ள வசதிகளும், வாய்ப்புகளும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதை கருத்தில் கொண்டும், அவர்களுக்கும் சமநீதியும், சமவாய்ப்பும் கிடைக்க வழிவகை செய்ய, மாண்புமிகு அம்மாவின் அரசு தான், உள் ஒதுக்கீடு வழங்கி, அதனை செயல்படுத்த ஆணையம் ஒன்றை அமைத்து, அவ்வாணையத்தின் அறிக்கையைப் பெற்று, அதன்படி 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு சட்ட முன் வடிவிற்கு சட்டமன்றத்தில் ஒப்புதல் பெற்று, மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இந்த உள் ஒதுக்கீட்டு சட்ட முன்வடிவை மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு விரிவான ஆய்வுக்குப்பின் சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.

வெண்ணை திரண்டு வரும் நேரத்தில், தங்களால் தான் எல்லாம் நடந்தது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் எண்ணத்துடன் மாண்புமிகு ஆளுநருக்கு கடிதம், அறிக்கைகள் என மாண்புமிகு எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகள், “அரசியல் ஆதாயம் தேடும் செயல்” மட்டுமே என்று நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர். மாண்புமிகு அம்மாவின் அரசு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதனால்தான் தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. மேலும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்பும் குறைவாக இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்து வரும் சீரிய நடவடிக்கைகளாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும், நோய்த் தொற்றின் பரவல் தொடர்ந்து குறைந்து வருகின்றது.

கொரோனா நோய் தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்திட தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பது உலக மக்கள் அனைவரும் அறிந்ததே. அதனை ஆவலுடன் அனைவரும் எதிர்பார்க்கும் இவ்வேளையில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை மிக வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்த மாண்புமிகு அம்மாவின் அரசால், மக்களின் நலன் கருதி, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி போடப்படும் என்று நான் அறிவித்தேன்.

ஏற்கனவே கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் மாண்புமிகு அம்மாவின் அரசுக்கு இருந்து வரும் நற்பெயரைக் கண்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி அடைந்திருக்கும் எதிர்க்கட்சியினர், மேற்கண்ட இந்த புதிய அறிவிப்பினால் தமிழ்நாடு அரசுக்கு மக்கள் ஆதரவு அமோகமாக பெருகி வருகிறதே என்ற அச்சத்தின் காரணமாக வழக்கம் போல் அறிக்கை அரசியல் நடத்துகிறார்கள். இதனை பார்த்து, தமிழ்நாட்டு மக்கள் எள்ளி நகையாடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.