Election Commission
Election Commission

Election Commission – டெல்லி : டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடிப்படையாக கொண்டு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் உட்பட, வர இருக்கும் அனைத்து தேர்தல்களிலும் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் டிடிவி.தினகரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பேசுகையில், “அதிமுகவிற்கு சொந்தமான இரட்டை இலை சின்னத்தை நாங்கள் கேட்கவில்லை.

மேலும் சம்பந்தமே இல்லாத ஒரு சின்னத்தை எங்கள் தரப்பு தேர்தலில் போட்டியிட கேட்டாலும் இபிஎஸ், ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்’’ என வாதிட்டார்.இதற்கு அதிமுக சார்பில் எதிர்ப்புகள் கிளம்பின.

அதைத்தொடர்ந்து, வரும் தேர்தல்களில் குக்கர் சின்னம் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டு உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவுக்கு தற்போது தேர்தல் ஆணையம் பதில் மனு அளித்துள்ளது.

இந்நிலையில் இன்று குக்கர் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ஆஜராகி பதில்மனு தாக்கல் செய்தார்.

அதில் ‘குக்கர் சின்னம் பொதுவான சின்னம் என்பதால் அமமுக கட்சிக்கு சின்னத்தை தர முடியாது.

தேர்தல் நேரத்தில் தான் அமமுக கட்சிக்கு எந்த சின்னம் என்று முடிவு செய்யப்படும்.

மேலும் அமமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல. பதிவு செய்யப்படாத ஒரு அமைப்புக்கு குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்க முடியாது’

என கூறி டிடிவி தினகரனின் கட்சிக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.