Edappadi Palanisamy gave award : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, Edappadi Palanisamy

சென்னை: நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்த சண்முகவேல், செந்தாமரை இருவருக்கும் கொள்ளையர்களை வீரமாக எதிர்த்து போராடியதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சுதந்திர தினமான இன்று சிறப்பு விருது வழங்கி கௌரவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 68). இவரது மனைவி செந்தாமரை. இவர்களுடைய இரு மகன்கள் மற்றும் மகள் வெளியூர்களில் வசிக்கின்றனர். சண்முகவேலும் செந்தாமரையும் கல்யாணிபுரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி அன்று இரவு 9.30 மணி அளவில் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் சண்முகவேல் வீட்டுக்கு திடீரென நுழைந்து, அவர்களில் ஒருவன் சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி அவரை கொல்ல முயன்றான்.

சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த செந்தாமரை, சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி அவரை கொல்ல முயல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கொள்ளையர்கள் இருவரும் வயதான தம்பதியை அரிவாளால் வெட்ட முயன்றனர்.

ஆனால் அதைக் கண்டு சிறிதும் அஞ்சாத அந்த வயதான தம்பதியர், கையில் கிடைக்கும் நாற்காலிகள், ஸ்டூல், கட்டை உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையர்கள் மீது வீசி அவர்களை தாக்கினர்.

அவர்களுடைய தாக்குதலை சமாளிக்க முடியாமல், கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

போகும் போது கொள்ளையர்கள் செந்தாமரையின் கழுத்தில் கிடந்த 4½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். இந்த காட்சிகள் அனைத்தும் சண்முகவேல் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் அந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதைப் பார்த்த பலரும், கொள்ளையர்களுடன் துணிச்சலாக போராடிய அந்த வீரத்தம்பதியை பாராட்டினார்கள். மேலும் அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், கையில் கிடைப்பதை வைத்து துணிச்சலுடன் செயல்பட மற்றவர்களுக்கு இந்த தம்பதி தூண்டுதலாக இருந்ததால், அவர்களை அரசு கவுரவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது.

எனவே அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கலாம் என்று தமிழக அரசுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பரிந்துரை கடிதம் எழுதினார்.

இதைத்தொடர்ந்து, சண்முகவேல்-செந்தாமரை தம்பதியின் துணிச்சலை பாராட்டி அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

எனவே சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று காலை 9 மணி அளவில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவில் சண்முகவேல்-செந்தாமரை தம்பதிக்கு, அதீத துணிச்சலுக்கான முதல்வரின் சிறப்பு விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி இருவரையும் கவுரவிக்க இருக்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.