ED Arrests Former FM Chidambaram
ED Arrests Former FM Chidambaram

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை இன்று டெல்லி திகார் சிறையில் அமலாக்கப் பிரிவு அதிரடியாக கைது செய்தது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21- ஆம் தேதி அன்று, சிபிஐயால் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். தற்போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்ய அனுமதி கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு மனுத் தாக்கல் செய்தது.

இந்நிலையில் மனுவை விசாரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்தவும், தேவைப்பட்டால் அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி அளித்தது. இதையடுத்து இன்று திகார் சிறையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர்.

சுமார் 2 மணிநேரம் நடந்த விசாரணைக்குப் பின் ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அனுமதிக்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்கள் ஆதாயம் அடைந்தன.

இதில் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத பணபரிமாற்றங்கள் விவகாரத்தில் சிதம்பரம் மீது அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

அதேநேரத்தில் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தது. ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட நேரத்தில் நாடெங்கும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி, அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்துள்ளனர்.