doctorate degree for tamilnacu cm palaniswamy
doctorate degree for tamilnacu cm palaniswamy

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக் கழகத்தின் நிறுவனர் ஏ.சி. சண்முகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி முதல்வரை கவுரவித்தார்.

பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களுக்கு பல்கலைக் கழகங்கள் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். அரசியல் தலைவர்கள் பலருக்கும் அவ்வவ்போது இந்தப் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது.

அதன்படி, சென்னையில் நேற்று சென்னை எம்ஜிஆர் கல்வி ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில், சிறந்த சேவை செய்ததற்காகவும், மக்கள் நலத்திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தியதற்காகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் “கவுரவ டாக்டர் பட்டம்” வழங்கப்பட்டது. இதனை பல்கலைக் கழகத்தின் நிறுவனர் ஏ.சி. சண்முகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில், டி.ஆர்.டி.ஓ. செயலாளர் சதீஷ் ரெட்டி, கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனையின் தலைவர் ராஜா சபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் பரதநாட்டிய கலைஞரும், நடிகையுமான ஷோபனா ஆகியோருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் என்னுடைய பொறுப்புகள் மேலும் அதிகமாகியுள்ளது என்று தெரிவித்தார். மேலும் உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. மேலும் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்’ என்றார்.

விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி, காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது