DMK urgent case regarding local government polls
DMK urgent case regarding local government polls

டெல்லி: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பாக, உரிய சட்ட நடைமுறைகளை தேர்தல் ஆணையம் பூர்த்தி செய்யக்கோரி உத்தரவிட வேண்டும் எனவும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வரும் டிசம்பர் 13-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. முன்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேல்முறையீட்டு மனு ஏற்கனவே நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நேற்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வார்டு மறுசீரமைப்பு பணிகளை முடித்த பிறகு, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என கோரி திமுக வழக்கு தொடர்ந்தது. திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் விவகாரத்தில் வார்டு மறுசீரமைப்புப் பணிகள், இடஒதுக்கீடு, சுழற்சி நடைமுறை மற்றும் இதர சட்டத் தேவைகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம், தமிழ்நாடு அரசு ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் இவ்வாறு உத்தரவிட்ட பிறகே தேர்தல் நடத்தும் அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மீண்டும் இன்று திமுக , உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது, ‘வார்டு வரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்., அதையடுத்து தேர்தல் அறிவிக்கை வெளியிட உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.