DMK president MK Stalin slams EPS
DMK president MK Stalin slams EPS

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் கொலைகள் குறித்து தமிழக சட்டப்பேரவையில் தவறான தகவல் தந்ததற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சட்டப்பேரவையில் தவறான தகவல் தந்ததற்காக, தமிழக முதல்வர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பச்சைப் பொய்ப் பிரச்சாரம் செய்துள்ளார். அதன் ஈரம் காய்வதற்குள், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், “இந்தியாவில், தமிழகத்தில் மட்டும் 1613 கொலைகள் நடைபெற்று, இந்தியாவில் கொலைகள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் 6-வது மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக தெரியவந்துள்ளது” .

இவ்வாறு தகவல்கள் வெளிவந்திருப்பதன் மூலம், அதிமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு கெட்டுகிடப்பது, தமிழக மக்களுக்கு ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது. மேலும் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காவல்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், 2016-ல் 1511 கொலைகளும், 2017-ல் 1466 கொலைகளும், 2018-ல் 1488 கொலைகளும் நடந்துள்ளதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த 3 வருடங்களில் மட்டும் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 4465 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், “முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவையில், 2017-ஆம் ஆண்டில் 1466 கொலைகள் மட்டுமே நடைபெற்றன என்று கூறி விட்டு, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திற்கு, அதே வருடத்தில் 1613 கொலைகள் நடைபெற்றுள்ளதாக கூறியிருப்பது, தமிழக சட்டப்பேரவையிலேயே முதல்வர் உண்மையை மறைத்து, தவறான தகவலைத் தந்திருக்கிறார்” என்பது தெளிவாகிறது.

மேலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களில் இந்திய அளவில், தமிழ்நாடு 8-வது இடத்திற்குள் உள்ளது. எனவே இந்தத் தோல்விகளுக்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.!! என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சட்டப்பேரவைக்கே தவறான தகவல் தந்ததற்காகவும் முதல்வர் எடப்பாடி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இனி அதிமுக அமைச்சர்களின் தலையீடு இன்றி, முதல்வர் அலுவலகத்தின் அரசியல் உத்தரவுகளுக்கு அடிபணியாமல், தமிழகக் காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுவதற்கு முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுத்து, தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here