DMK leader Stalin pays tribute to baby Surjit
DMK leader Stalin pays tribute to baby Surjit

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த குழந்தை சுர்ஜித் கல்லறையில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்- ஐ மீட்க, சுமார் 80 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இறுதியில் தோல்வியில் முடிந்தது. சிறுவன் சுர்ஜித் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து குழந்தையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக திருச்சி பாத்திமாபுதூர் பகுதியில் உள்ள கல்லறையில் குழந்தையின் உடல் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களும், அரசியல் கட்சி தலைவர்களும், குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குழந்தையின் இழப்புக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும் நேரில் சென்று குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும், கரூர் தொகுதி எம்.பி ஜோதிமணி, திமுக பிரமுகர்கள் கே.என் நேரு, திருச்சி சிவா மற்றும் செந்தில்பாலாஜி போன்றவர்களும் குழந்தையின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஸ்டாலின் கூறியதாவது: “மீட்பு பணியை நேரில் பார்வையிட்டால் அரசியல் சாயம் பூசப்படும் என்பதால் தான் வந்து பார்க்கவில்லை., சுஜித்தை மீட்க தமிழக அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார். மேலும் அமைச்சர்கள், அதிகாரிகள் பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்பு பணியில் காட்டவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தமிழக அரசு தடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ஆழ்துளை குழியில் 36 அடியில் இருந்தபோதே குழந்தை சுர்ஜித்தை மீட்டிருக்கலாம் என கூறிய ஸ்டாலின், குழந்தை சுர்ஜித்தை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு 10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.