எம்ஜிஆரின் பிறந்த நாளை பேனர் வைத்து கொண்டாடிய இயக்குனர் பிடி செல்வகுமாரின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர், தயாரிப்பாளர், கலப்பை மக்கள் இயக்க தலைவர் என பன்முகம் கொண்ட பிடி செல்வகுமார் அவர்கள் எம்ஜிஆரின் பிறந்த நாளை ஆயிரம் அடி கொண்ட பேனரை வைத்து கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அதாவது, நாகர்கோவிலில் ஜன 17 ஆம் தேதியான இன்று திரைப்பட நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான பிடி செல்வகுமார் 1000 அடி பேனரில் அவரது புகைப்படங்களை பதித்து சாதனை படைத்தார்.

கலப்பை மக்கள் இயக்கம் நிறுவனர் பிடி செல்வகுமார் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு1000 அடி நீள பேனரில் எம்ஜிஆர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களின் எம்ஜிஆரின் கெட்டப்பை பிரிண்ட் செய்து நாகர்கோவில் மாநகரின் முக்கிய பகுதியான வேப்பமூடு பார்க்கிலிருந்து செட்டிகுளம் ஜங் வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்வலமாக நின்று அனைவரும் கவரும் வண்ணம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வாழ்க கோஷத்தை எழுப்பி புதிய சாதனை படைத்தார். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நகரின் முக்கிய பகுதியில் நடைபெற்ற இந் நிகழ்வை அனைவரும் வியந்து பார்த்து சென்றனர். முதியோர் சிலர் எம்ஜிஆர் படம் பொறித்த பேனரை முத்தமிட்டும், வணங்கியும் சென்றனர்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில் “ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் கடைசி வரை ஏழைகள் முன்னேறுவதற்காகவே வாழ்ந்தார். அனைத்து தரப்பு மக்களையும் அரவணைக்க செய்தார் .அவர் செய்த ஒவ்வொரு நற்செயல்களும் ஏழை எளிய மக்களை சென்றடைவதாகவே இருந்தது புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவாக மாவட்டந்தோறும் அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட வேண்டும்”என்று கூறினார். விழாவில் கலப்பை மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், ராஜன், விசுவைசந்திரன், சிவராஜன், ஆனந்த், முத்துக்குமார், ஜெபர்சன்,முத்து புஷ்பராஜ்,ரகு செந்தில் மற்றும் கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.