Director Ameer

Director Ameer : பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம் கவிஞரும், இஸ்லாமிய மெய்யியலாளரும், தேச ஒற்றுமைக்குப் பாடுபட்டவருமான சர் முகமது இக்பால் என்பவர் எழுதிய ‘சாரே ஜஹான் சே அச்சா’ எனும் பாடலை, தமிழ்க் கவி வேந்தர் மு.மேத்தா அவர்கள் மொழிபெயர்த்து, இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையமைத்து, நித்யஸ்ரீ மகாதேவன் பாடிய “தாயே, இந்தியத் தாயே …” எனும் பாடலை கவிக்கோ மன்ற நிறுவனரும் சிங்கைத் தமிழருமான எம்.ஏ.முஸ்தபா அவர்கள் தயாரித்திருக்கிறார்.

இவ்வளவு நாட்கள் ஒரு இசையமைப்பாளராக நாம் பார்த்துவந்த தாஜ்நூர் இந்த பாடல் மூலமாக ஒரு சிறந்த இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.. ஆம்.. இன்றைய சூழலில், ஒரு பாடல் இசையால் மட்டும் பெரிய அளவில் மக்களிடம் சென்று சேர்ந்துவிடாது.. அந்த பாடலுக்கு ஏற்றாற்போல் காட்சியமைப்பும் சிறப்பாக இருக்க வேண்டும் அப்போதுதான் அந்த பாடல் முழு வெற்றி அடையும் என்பதில் தாஜ்நூர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.. அந்தவிதத்தில் இந்தப்பாடலுக்கு இசையமைத்ததது மட்டுமில்லாமல், 6 மாதங்களுக்கும் மேலாக பாடலுக்கான காட்சி வடிவத்தையும் இயக்கி, ஒரு இயக்குனராகவும் தனது பங்களிப்பை செய்துள்ளார். இதன் மூலம் திரையுலகில் தன்னுடைய அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.

தேச ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த இசைப்பாடலை ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் வெளியிட இயக்குனர் அமீர் பெற்றுக்கொண்டார் பாடல் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மு.மேத்தா, தாஜ்நூர், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன், இயக்குனர் மீரா கதிரவன், எம்.ஏ.முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்..

இதில் இயக்குனர் அமீர் பேசும்போது,

“இந்த விழாவுக்கு கிளம்பும்போது இந்தியத்தாயை வாழ்த்த கிளம்பி விட்டீர்களா..? அப்படியென்றால் தமிழ் தேசியம் என்னாயிற்று என்று சிலர் கேட்டார்கள்.. நானும் இந்தியத்தாயின் பிள்ளையாகத்தான் இருக்க ஆசைப்படுகிறேன்.. பாரத மாதாவின் காலடியில் இருக்கிறோம் என்றாலும் தாயின் காலடியில் தான் சொர்க்கம் என்பது போல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை.. ஆனால் முகத்திற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை காலுக்கு கொடுப்பதில்லை.. பாரத மாதாவின் காலாக இருக்கும் தமிழகத்தை அப்படித்தான் பார்க்கிறார்கள். ஆனால் கால் இல்லாமல் வாழவே முடியாது என்பதை மறந்து விடுகின்றனர்.

இன்று செய்வதற்கே அஞ்சுகின்ற பஞ்சமா பாதகச்செயலை செய்பவர்கள் கூட ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோஷமிட்டுக் கொண்டு செல்கிறார்கள்.. தேசத்தை நேசிக்காமல் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செல்லும் அவர்களை விட, இந்த தேசத்தை யார் உண்மையாக நேசிக்கிறோம் என்பது மற்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த பாடல் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தில் எண்ணமாகவும் தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என” கூறினார் அமீர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.