Dinesh karthik :
Dinesh karthik :

Dinesh karthik :

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழ் பேசத் தெரிந்த ஒருத்தர் என்னுடன் இருப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

2007-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிக்குபின் 2 உலகக் கோப்பையில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படாமல் இருந்தார்.

2017-ம் ஆண்டு மீண்டும் அணிக்குள் வந்த தினேஷ் கார்த்திக், இங்கிலாந்தில் வரும் மே மாதம் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் 15 பேர்கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்திய அணியில் விக்கெட் கீப்பருக்கான இடத்தை நீண்டகாலமாக தோனி தக்கவைத்து வருகிறார்.

அந்த இடத்துக்கு விருத்திமான் சாஹா, தினேஷ் கார்த்திக், பர்தீவ் படேல், ரிஷப் பந்த் ஆகிய 4 வீரர்களுக்கு இடையே கடும் போட்டி அவ்வப்போது ஏற்பட்டாலும், இறுதியாக ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் இடையே போட்டி வந்துள்ளது.

ஒருவேளை உலகக் கோப்பைப் போட்டி முடிந்தபின் தோனியின் இடத்தை அணியில் தினேஷ் கார்த்திக் நிரப்புவாரா அல்லது ரிஷப்பந்த்துக்கு அந்த இடம் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஐபிஎல் போட்டியில் கூட இரு வீரர்களும் சரியாக பேசிக்கொள்வதில்லை.

ரிஷப்பந்த் குறித்து தினேஷ் கார்த்திக், ஆங்கிலநாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ” ரிஷப்பந்த் அல்லது நான் இருவரில் ஒருவர் நிச்சயம் போட்டியில் சேர்ந்து விளையாட முடியாது,யாராவது ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும்.

அதுதான் போட்டியின் இயல்பு. ஆனால், இருவரும் ஒருபோதும் இதுதொடர்பாக பேசிக்கொண்டது இல்லை.

ரிஷப் பந்த் அவருக்கான வாய்ப்பு குறித்து அவருக்கு தெரியும், எனக்கும் என்னுடையவாய்ப்பு என்ன என்பது தெரியும்.

அவர் அணிக்குள் தேர்வு செய்யப்பட்டால் நான் சிறிது வருத்தப்படுவேன், நான் தேர்வு செய்யப்பட்டால் அவர் வருத்தப்படுவார்.

ஆனால், இளமையும், துடிப்பும் உள்ள அவருக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பு உண்டு. ரிஷப் பந்த் சிறப்பான வீரர், இந்திய அணியில் நீண்டகாலம் விளையாடுவார் என நம்புகிறேன்.

நான் தோனியுடன் சேர்ந்து விளையாடியது போல், ஓய்வறையை பகிர்ந்து கொண்டதுபோல், ரிஷப்பந்தால்,

என்னுடன் விளையாட முடியாதா, உலகக் கோப்பைப் போட்டிக்குப் பின் என் ஓய்வறையை அவரும் பகிர்ந்து கொள்ளலாம்தானே” எனத் தெரிவித்தார்.

அதாவது மறைமுகமாக, உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் தோனி ஓய்வு பெற்றுவிட்டால், அணியில் விக்கெட் கீப்பராக நியமிக்கப்படலாம் என்பதை சூசகமாக தெரிவித்தார்.

உலகக் கோப்பை அணியில் விஜய் சங்கர் தேர்வு குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில், ” உலகக் கோப்பை அணியில் உள்ள வீரர்களில் தமிழ் பேசுவதற்கு ஒருத்தராவது இருக்கிறார் என்று எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

அவருடன் தமிழ்பேசி மகிழமுடியும். இருவரும் சேர்ந்து இட்லி, தோசை சாப்பிடமுடியும் ” எனத் தெரிவித்தார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.