Dharma Prabhu Set : சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களை வைத்து கிட்டத்தட்ட 75 படங்களை இயக்கிய மேதை எஸ்.பி.முத்துராமன்.
பல வெற்றிப் படங்களை கொடுத்து அதன் மூலம் பல விருதுகளை குவித்தவர். மேலும், பல குடும்பங்களையும், விநியோகஸ்தர்களையும் வாழ வைத்தவர். இயக்குநர், தயாரிப்பாளர் இப்படி அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஏ.வி.எம். ஸ்டுடியோவில் இருக்கும் அவரது அலுவலகத்திற்கு தினமும் வருவது வழக்கம்.
இந்நிலையில், யோகிபாபு எமதர்மராஜாவாக நடிக்கும் ‘தர்மபிரபு’ படத்திற்காக எமலோக தளத்தை மிகப்பெரிய செலவில் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.
அதைக் கேள்விப்பட்ட எஸ்.பி.முத்துராமன் அந்த தளத்தை பார்வையிட விரும்பி படக் குழுவினரிடம் கேட்டார்.
இவ்வளவு பெரிய மாமேதை நம் தளத்தைப் பார்வையிட விரும்புவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த படக் குழுவினர் படப்பிடிப்பு தளத்தைச் சுற்றிக் காட்டினர். அதைப் பார்த்த அவர் இந்த ஏ.வி.எம். ஸ்டுடியோவில் எத்தனையோ பெரிய பெரிய தளங்களைப் பார்த்திருக்கிறேன்.
ஆனால், அதெல்லாம் அந்த காலம். இக்காலத்தில் இப்படியொரு பிரம்மாண்ட தளத்தைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாராட்டினார்.
மேலும், அப்படத்தின் கதையையும் கேட்டறிந்து, கதை நன்றாக இருக்கிறது. நிச்சயம் வெற்றி பெரும் என்றும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும், முன்பெல்லாம் சிவாஜி கணேசன், என்.டி.ஆர்., ராஜ்குமார் போன்ற நடிகர்களின் படங்களுக்கான படப்பிடிப்பு தளங்கள் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் அடுத்தடுத்த தளத்தில் ஒரே நேரத்தில் நடக்கும்.
ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பார்கள். இப்பொழுது வெறிச்சோடி கிடக்கிறது.
அப்படியே ஒன்றிரண்டு நடந்தாலும், அவர்கள் ஒருவருவரைப் பார்த்து ஒரு சிறிய வணக்கத்துடன் முடித்துக் கொள்கின்றனர் என்று தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.