
சென்னை : மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் ஆங்காங்கே பருவ மாற்றத்தினால், பலருக்கும் உடல்நலம் பாதிக்கும். தற்போது தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் பரவி வருகிறது.
சென்னையை சேர்ந்த 7 வயது குழந்தைகள் தீஷா மற்றும் தர்ஷன். காய்ச்சல் காரணமாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 2 குழந்தைகளும் இன்று இறந்தனர். இருப்பினும் டெங்குவால் இறந்தனர் என மருத்துவமனையில் எதுவும் அறிவிக்கவில்லை.
ஆனால், சென்னையில் மட்டுமே 50- க்கும் மேற்பட்டோர் டெங்குவால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் ,” மக்கள் யாரும் டெங்கு காய்ச்சலால் பயப்பட வேண்டாம், டெங்கு காய்ச்சல் அறிகுறி எதேனும் இருப்பின் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.
வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், வெளியில் இருந்து வருவோர் கை கால்களை சுத்தமாக கழுவி வீட்டிற்குள் செல்ல வேண்டும். நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்” இவ்வாறு கூறினார்.