CM Wishes to Civil Exam Winners
CM Wishes to Civil Exam Winners

CM Wishes to Civil Exam Winners : மத்திய அரசின் சிவில் தேர்வில் வென்றவர்களுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் 2019-ம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான மதுரை மாவட்டம், மணிநகரம் பகுதியைச் சேர்ந்த செல்வி பூரண சுந்தரி மற்றும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. பால நாகேந்திரன் ஆகிய இருவரும் இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வென்று சாதனை புரிந்துள்ளார்கள் என்பதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கேற்ப செல்வி பூரண சுந்தரி மற்றும் திரு. பாலநாகேந்திரன் ஆகிய இருவரின் மன உறுதியும், விடா முயற்சியும் தான்
அவர்களுடைய வெற்றிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும் “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற அடிப்படையில் கடமைகளை உணர்ந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன், அரசு நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்கள் நலம் மேம்படும் வகையில் பணிகளை ஆற்றிட வேண்டுமென அன்புடன் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

எண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல என்பதற்கு சான்றாக திகழும் செல்வி பூரண சுந்தரி மற்றும் திரு. பாலநாகேந்திரன் ஆகியோரது வெற்றி, சாதனை படைக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழும் என்பதில் ஐயமில்லை. இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.