CM Statement on Anaikarai Death
CM Statement on Anaikarai Death

CM Statement on Anaikarai Death : தென்காசி மாவட்டம் தென்காசி வட்டத்தில் போலீஸ் விசாரணையின் போது அணைக்கரை முத்து என்பவர் மரணமடைந்தார். அவருடைய மரணம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

தென்காசி மாவட்டம் மற்றும் தென்காசி வட்டம், ரவணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. அணைக்கரை முத்து என்பவர் அவருடைய நிலத்தைச் சுற்றி உரிய அனுமதி பெறாமல் மின்வேலியை அமைத்துள்ளார் எனவும், அதனால் கடையம் வனத்துறையினர் கடந்த 22.7.2020 அன்று இரவு இதனை கண்டுபிடித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில், மின் இணைப்பை துண்டித்து விட்டு, திரு. அணைக்கரை முத்துவை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர் எனவும், விசாரணையின் போது திரு. அணைக்கரைமுத்து அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையதிற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இயக்குனர் மகேந்திரனிடம் அஜித் வைத்த கோரிக்கை, நிறைவேறாமல் போன சோகம் – விஜய் பட இயக்குனரால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

இச்சம்பவம் தொடர்பாக ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் தலைமை குற்றவியல் நடுவர் அவர்களால் சம்பவம் குறித்து நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதித்துறை நடுவர் அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில், சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இத்தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்த திரு. அணைக்கரைமுத்து அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், அன்னாரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.