CM says protest carried out to defame govt
CM says protest carried out to defame govt

டெல்லி: மருத்துவர்கள் போராட்டத்தை தமிழக அரசு வேடிக்கை பார்க்காது, மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

போதுமான ஊதியம் கிடைக்கவில்லை, பதவி உயர்வு வழங்கப்படுவது இல்லை, காலி மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, மருத்துவ மேல்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 4 கோரிக்கையை வைத்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வைத்த இந்த 4 கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. இந்நிலையில் அரசு மருத்துவர்கள் போராட்டம் தமிழகம் முழுக்க தற்போது தீவிரம் அடைந்துள்ளது.

மருத்துவர்களின் இந்த போராட்டத்தை உடனடியாக கைவிட்டு அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் போராட்டம் கைவிடப்படவில்லை.. இந்நிலையில் மருத்துவர்கள் போராட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சங்கத்தினர் இதில் போராடவில்லை.. அவர்களுடன் நாங்கள் பேசி, அதற்கான தீர்வு கண்டுவிட்டோம். அங்கீகரிக்கப்படாத மருத்துவ சங்கத்தினர் மட்டும்தான் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள்., எனவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் இவ்வாறு காலம் தாழ்த்தி வருவதை அரசால் ஏற்க முடியாது, அப்படிப்பட்டவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஒரு மருத்துவரை உருவாக்க மக்கள் பணத்தில் இருந்து 1.24 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. மருத்துவர்கள் போராட்டத்தை தமிழக அரசு வேடிக்கை பார்க்காது. மருத்துவம் என்பது சேவை நோக்கம். பிடிவாதம் காட்டும் மருத்துவர்களை அரசு வேடிக்கை பார்க்காது. போராட்டம் தொடர்ந்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும்.. என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மேலும் என்ன நடவடிக்கை பாயும் என்பதை அமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். பணிக்கு வராத மருத்துவர்களுக்கு பதிலாக வேறு மருத்துவர்கள் நியமிக்கப்படுவர் எனவும் கூறினார். மேலும் அரசால் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை அரசு மருத்துவர்கள் முன்வைக்கின்றனர், இதனால் அரசுக்கு நெருக்கடி ஏற்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.