CM Palanisamy in ITC New Factory Opening

ஐடிசி நிறுவனத்தின் புதிய உணவு உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியுள்ளார்.

CM Palanisamy in ITC New Factory Opening : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இல் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா தெய்வத்தை வணங்குகிறேன்.

இன்று, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் ITC நிறுவனத்தின் உணவுப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையினை தொடங்கி வைப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த இனிய விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. எம்.சி. சம்பத் அவர்களே!

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்களே!

மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் திரு. இரா. காமராஜ் அவர்களே! மற்றும் நிகழ்ச்சியிலே பங்கு பெற்று காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றிய ITC நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அவர்களே!

மற்றும் நிறுவனத்தின் பணியாளர்களே! இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள பொது மக்களே, பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்களே, உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளே, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களே மற்றும் வருகை தந்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற தொழில் துறை முதன்மைச் செயலாளர் அவர்களே, அரசு அலுவலர்களே, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களே, உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரும் விரும்பும் மாநிலமாகவும், தொழில்மயமான மாநிலங்களில் முன்னணி மாநிலமாகவும் நம்முடைய தமிழ்நாடு திகழ்கிறது.

வெற்றிகரமான இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலமாகவும் வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாகவும் மாண்புமிகு அம்மாவின் அரசு அந்நிய முதலீடுகளை கணிசமான அளவில் ஈர்த்திருக்கிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா நோய்த் தொற்று சூழ்நிலையிலும், 40,718 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து, அதன்மூலம் 74,212 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

இதன்மூலம் 2020 ஆம் ஆண்டில், புதிய முதலீடுகளை ஈர்ப்பதில், அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015ன் போது, ITC நிறுவனம் விராலிமலையில், உணவு பொருட்கள் உற்பத்தி திட்டத்தினை செயல்படுத்துவதற்காக 1,077 கோடி ரூபாய் முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கையெழுத்திட்டது.

அதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக, இதுவரையில் சுமார் 820 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு 2,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

மேலும், ITC நிறுவனம், 351 கோடி ரூபாய் முதலீட்டில் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில், மறு பொட்டலமிடுதல் மற்றும் சேமிப்பு கிடங்கு வசதிகளுக்காக தனது இரண்டாம் கட்ட திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை இன்று துவக்கி உள்ளது.

தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய இந்த பகுதியில் முதலீடு செய்துள்ள ITC நிறுவனத்தின் இத்திட்டத்தினைத் துவக்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தொழில் திட்டங்களை செம்மையாக உலகதரத்தில் செயல்படுத்தி வருகின்ற ITC நிறுவனத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுமட்டுமல்லாமல், இப்பகுதியில் பல்வேறு சமுதாய மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வரும் ITC நிறுவனத்திற்கு எனது பாராட்டுகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

ITC நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் மேலும் அதிக முதலீடுகளை செய்திட முன்வர வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ITC நிறுவனம் தனது வெற்றிப் பயணத்தினைத் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.