CM Order On Ezhava Community Certificate
CM Order On Ezhava Community Certificate

CM Order On Ezhava Community Certificate : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் 27.7.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் வாழும் “ஈழுவா” வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான ஆணையினையும், “தீயா” வகுப்பினரை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான ஆணையினையும் தமிழ்நாடு ஈழுவா தீயா சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

ஈழுவா மற்றும் தீயா வகுப்பினர்களை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்ப்பதற்கு பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றன. அதனை ஆய்வு செய்ததில், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டை வட்டமும், திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானத்திலிருந்து பிரிக்கப்பட்டு தமிழ்நாட்டுடன்
சேர்க்கப்பட்டன.

அந்த சமஸ்தானத்தில் சலுகைகள் பெற்று வந்த சாதிகளுக்கு தமிழ்நாட்டிலும் அச்சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஈழுவா வகுப்பு கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை வட்டத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக (BC) வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தின் இதர பகுதிகளில் வாழும் ஈழுவா வகுப்பினருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ் வழங்குவது குறித்தான கோரிக்கையின் மீதும், தீயா வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்தான கோரிக்கையின் மீதும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை பெறப்பட்டது. அதன் பின்னர், இதனை ஆய்வு செய்ய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் வாழும் ஈழுவா வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான ஆணையினையும், தீயா வகுப்பினரை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான ஆணையினையும் தமிழ்நாடு ஈழுவா தீயா சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகளிடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி, மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி எஸ்.வளர்மதி, மாண்புமிகு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் திரு. பொள்ளாச்சி வி. ஜெயராமன், தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம், இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்தர மோகன்.பி, இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இயக்குநர் திரு. சி. காமராஜ், இ.ஆ.ப., தமிழ்நாடு ஈழுவா தீயா சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் திரு. எம்.ஆர். ரமேஷ் குமார், கௌரவத் தலைவர் திரு. கோகுலம் கோபாலன், ஒருங்கிணைப்பாளர் திரு.கே.ஆர். ஜெயக்குமார், இணை ஒருங்கிணைப்பாளர் திரு.ஆர். அகிலேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.