Chennai team victory
Chennai team victory

Chennai team victory – பிரிமியர் லீக் போட்டியில் அசத்திய சென்னை அணி 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது முதல் ஓவரிலேயே ‘ஆபத்தான’ கெய்ல், மயங்க் அகர்வாலை வெளியேற்றிய ஹர்பஜன் சிங், சென்னை அணியின் வெற்றி நாயகனாக ஜொலித்தார்.

இந்தியாவில் 12வது பிரிமியர் தொடர் நடக்கிறது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை அணி, பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

சென்னை அணிக்கு வாட்சன், டுபிளசி ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஷமி வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் டுபிளசி.

மறுமுனையில் அசத்திய வாட்சன், ஆன்ட்ரூ டை வீசிய 5வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.

முதல் விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்த போது அஷ்வின் ‘சுழலில்’ வாட்சன் (26) சிக்கினார்.

அடுத்து வந்த ரெய்னா, ஆன்ட்ரூ டை பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். டுபிளசி, 33 பந்தில் அரைசதம் கடந்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு 44 ரன் சேர்த்த போது அஷ்வின் வீசிய 14வது ஓவரின் 3வது பந்தில் டுபிளசி (54) அவுட்டானார்.

அடுத்த பந்தில் ரெய்னா (17) போல்டானார். ஐந்தாவது பந்தை அம்பதி ராயுடு தடுத்தாட, ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது.

கடைசி கட்டத்தில் கேப்டன் தோனி, அம்பதி ராயுடு மிரட்டினர். கர்ரன் வீசிய போட்டியின் 19வது ஓவரில் தோனி ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரி விளாச, மொத்தம் 19 ரன்கள் எடுக்கப்பட்டன.

ஷமி வீசிய அடுத்த ஓவரில் ராயுடு ஒரு சிக்சர் விளாச, கவுரவமான ஸ்கோர் உறுதியானது.

சென்னை அணி 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது. தோனி (37), ராயுடு (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

பஞ்சாப் அணி சார்பில் கேப்டன் அஷ்வின் 3 விக்கெட் கைப்பற்றினார்.

பின் களமிறங்கிய பஞ்சாப் அணியை தனது ‘சுழல்’ மந்திரத்தில் திணறடித்தார் சென்னையின் ஹர்பஜன் சிங். தனது முதல் ஓவரில் கெய்ல் (5), மயாங்க் அக்ர்வாலை (0) அவுட்டாக்கினார்.

பின் பொறுப்பாக ஆடிய லோகேஷ் ராகுல், சர்பராஸ் கான் அரைசதம் கடந்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு 110 ரன் சேர்த்த போது ஸ்காட் பந்தில் ராகுல் (55) அவுட்டானார். டேவிட் மில்லர் (6) ஏமாற்றினார்.

கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 26 ரன் தேவைப்பட்டது. ஸ்காட் வீசிய இந்த ஓவரின் 4வது பந்தில் சர்பாஸ் (67) அவுட்டாக, 3 ரன் மட்டுமே கிடைத்தது.

பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 138 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

சென்னை அணி சார்பில் 2 விக்கெட் வீழ்த்திய ஹர்பஜன், ஆட்ட நாயகன் விருதை வென்றார்.