Chennai Super Kings
Chennai Super Kings

Chennai Super Kings : 

ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

சென்னை அணியில் ஹர்பஜன்சிங், ஸ்காட் குஜ்ஜெலின் நீக்கப்பட்டு மிட்செல் சான்ட்னெர், ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன், ஜெய்தேவ் உனட்கட் திரும்பினார்கள். 17 வயதான ரியான் பராக் அறிமுக வீரராக இடம் பிடித்தார்.

கடந்த லீக் ஆட்டத்தில் இடம் பெற்று இருந்த பிரசாந்த் சோப்ரா, கிருஷ்ணப்பா கவுதம், சுதேசன் மிதுன் கழற்றி விடப்பட்டனர்.

‘டாஸ்’ ஜெயித்த சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரஹானே, ஜோஸ் பட்லர் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

முதல் ஓவரில் ஜோஸ் பட்லர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரும், 2-வது ஓவரில் ரஹானே தொடர்ந்து 2 பவுண்டரியும் விளாசி அமர்க்களமாக ஆட்டத்தை தொடங்கினார்கள். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

3-வது ஓவரில் தீபக் சாஹர் பந்து வீச்சில் ரஹானேவுக்கு (14 ரன், 11 பந்து, 3 பவுண்டரி) எதிராக எல்.பி.டபிள்யூ. கேட்டு அப்பீல் செய்யப்பட்டது.

ஆனால் நடுவர் அவுட் கொடுக்க மறுத்ததை தொடர்ந்து சென்னை அணியின் கேப்டன் டோனி டி.ஆர்.எஸ். முறையில் நடுவரின் முடிவுக்கு எதிராக முறையீடு செய்தார்.

இதனை ஆய்வு செய்த 3-வது நடுவர் ரஹானே அவுட் என்று அறிவித்தார். அடுத்து களம் கண்ட சஞ்சு சாம்சன் தான் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார்.

4-வது ஓவரில் ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விரட்டி ரசிகர்களை குஷிப்படுத்திய ஜோஸ் பட்லர் (23 ரன், 10 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவரது அடுத்த பந்தில் அம்பத்தி ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து ஸ்டீவன் சுமித் களம் கண்டார். 4.4 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 50 ரன்னை கடந்தது.

6-வது ஓவரில் சஞ்சு சாம்சன் (6 ரன்) மிட்செல் சான்ட்னெர் பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் துருவ் ஷோரேவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

அடுத்து வந்த ராகுல் திரிபாதி (10 ரன்) மற்றும் ஸ்டீவன் சுமித் (15 ரன்) ரவீந்திர ஜடேஜாவின் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்த 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம் ரவீந்திர ஜடேஜா ஐ.பி.எல். போட்டியில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய 13-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதைத்தொடர்ந்து ரியான் பராக், பென் ஸ்டோக்சுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும்,

அதேநேரத்தில் தவறான பந்துகளை தண்டிக்கும் வகையில் அடித்தும் ஆடினார்கள். 14.2 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை தொட்டது.

அணியின் ஸ்கோர் 15 ஓவர்களில் 103 ரன்னாக இருந்த போது ரியான் பராக் (16 ரன், 14 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய பென் ஸ்டோக்ஸ் (28 ரன், 26 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) தீபக் சாஹர் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

இதனை அடுத்து ஸ்ரேயாஸ் கோபால், ஜோப்ரா ஆர்ச்சருடன் இணைந்தார். கடைசி ஓவரில் இருவரும் 18 ரன்கள் சேர்த்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது.

ஜோப்ரா ஆர்ச்சர் 12 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 13 ரன்னும், ஸ்ரேயாஸ் கோபால் 7 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 19 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும், மிட்செல் சான்ட்னெர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் ரன் எதுவும் எடுக்காமலும்,

சுரேஷ் ரெய்னா 4 ரன்னும், பாப் டுபிளிஸ்சிஸ் 7 ரன்னும், கேதர் ஜாதவ் 1 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சி தொடக்கம் அளித்தனர்.

இதனால் அந்த அணி 5.5 ஓவர்களில் 24 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

5-வது விக்கெட்டுக்கு கேப்டன் டோனி, அம்பத்தி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

அணியின் ஸ்கோர் 17.4 ஓவர்களில் 119 ரன்னாக உயர்ந்த போது அம்பத்தி ராயுடு (57 ரன்கள், 47 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஸ்ரேயாஸ் கோபாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து ரவீந்திர ஜடேஜா களம் இறங்கினார்.

கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தை ரவீந்திர ஜடேஜா சிக்சருக்கு தூக்கினார்.

நோபாலாக வீசப்பட்ட 2-வது பந்தில் ரவீந்திர ஜடேஜா ஒரு ரன் ஓடினார். அதற்கு அளிக்கப்பட்ட ‘பிரீ ஹிட்’ வாய்ப்பை எதிர்கொண்ட டோனி 2 ரன்கள் அடித்தார்.

அடுத்த பந்தில் டோனி (58 ரன்கள், 43 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) போல்டு ஆனார்.

இதனை அடுத்து களம் கண்ட மிட்செல் சான்ட்னெர் தான் சந்தித்த முதல் பந்தில் 2 ரன் எடுத்தார்.

அந்த பந்து உயரமாக வீசப்பட்டதால் ஆடுகளத்துக்கு வெளியில் இருந்து மைதானத்துக்குள் புகுந்த டோனி அந்த பந்தை நோ-பாலாக அறிவிக்கும்படி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை நடுவர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.

5-வது பந்தில் சான்ட்னெர் 2 ரன் அடித்தார். கடைசி பந்தில் 4 ரன் தேவை என்ற நிலையில் அந்த பந்து வைடாக வீசப்பட்டது.

இதனால் மீண்டும் வீசப்பட்ட கடைசி பந்தில் சான்ட்னெர் சிக்சர் விளாசி தனது அணியினரை குதூகலப்படுத்தினார்.

20 ஓவர்களில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது.

ரவீந்திர ஜடேஜா 4 பந்துகளில் ஒரு சிக்சருடன் 9 ரன்னும், சான்ட்னெர் 3 பந்துகளில் ஒரு சிக்சருடன் 10 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

7-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். இந்த சீசனில் சென்னை அணி 2-வது முறையாக ராஜஸ்தானை வீழ்த்தியது. சென்னை அணியின் கேப்டன் டோனி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.