தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலார்ட் திரும்ப பெறப்பட்டுள்ளது. ஆனால், 24 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் ‘மத்திய மேற்கு மற்றும் அதனை சுற்றியுள்ள தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக்கூடும். அதே நேரத்தில் அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நிலவுவதால், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும்’ எனக் கூறினார்.

மேலும், 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் எனக்கூறிய அவர், 4 மாவட்டங்களுக்கான ரெட் அலார்ட் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் அறிவித்தார்.

அதோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என அவர் தெரிவித்தார்.