Celebrity greetings Payanigal Gavanikavum
Celebrity greetings Payanigal Gavanikavum

ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பான இந்த படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர்கள் விதார்த், கருணாகரன், சரித்திரன், நடிகைகள் லட்சுமி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி சக்திவேல் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தின் வெளியாகும் முதல் ஒரிஜினல் படைப்பு. இந்த திரைப்படம் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

இதற்காக திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதில் நட்சத்திர நடிகர்களான சூரி, இயக்குநர்கள் அறிவழகன், சாம் ஆண்டன், ரவிக்குமார், கேபிள் சங்கர், கார்த்திக் யோகி, படத்தின் இயக்குநர் சக்திவேல், நடிகர்கள் விதார்த், கருணாகரன், மாசூம் சங்கர், நடிகை ரூபா மஞ்சரி, மணிகண்டன், வினியோகஸ்தர் சக்திவேல், தயாரிப்பாளர் எஸ் தாணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தை பார்வையிட்ட அனைவரும் சமூக வலைதளம் குறித்த சரியான பார்வையை இந்த திரைப்படம் இளைய தலைமுறையினருக்கு வழங்கியிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக நடிகர் சூரி பேசுகையில், ” பயணிகள் கவனிக்கவும் படத்தை மக்கள் அனைவரும் கவனிக்க வேண்டும். மிகவும் அற்புதமான படம். நல்ல படத்தை பார்த்த சந்தோசம் மனதில் இருக்கிறது. மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தமிழில் என்னுடைய நண்பர் சக்திவேல் இயக்கியிருக்கிறார். இன்றைய சூழலில் சமூக வலைதளங்களை எந்த அளவிற்கு பயன்படுத்தவேண்டும் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். ஒரு போட்டோவை பதிவிடுவதாக இருந்தாலும் சரி… ஒரு வீடியோவை பதிவிடுவதாக இருந்தாலும் சரி… அல்லது அதுகுறித்து கருத்துக்கள் தெரிவித்தாலும் சரி.. அதை எவ்வளவு கவனத்துடன் கையாள வேண்டும் என்பதையும், தவறாக பதிவிட்டால் எத்தனை பேருடைய வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பதையும் எடுத்துக்காட்ட இந்த ஒரு படம் போதும்.

சமூக வலைதளங்களை நல்ல விதத்தில் பயன்படுத்தினால் ஒருவருடைய வாழ்க்கை எப்படி மேன்மை அடைகிறது என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.

நான்கு பேருக்கு முன்னால் நன்றாக வாழவேண்டும் என்பதை விட நான்கு செல்போன்களுக்கு இடையே மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. இதை தெளிவாக சொல்லியிருக்கும் திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’.

பொதுவாக பல படங்களை ரீமேக் செய்கிறார்கள். ஆனால் எந்தப் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்ற அவசியம் இருக்கிறதோ…! அந்தப் படத்தை ரீமேக் செய்வதுதான் சரி. அந்தவகையில் சமூகத்திற்கு நலன் பயக்கும் தரமான படத்தை ரீமேக் செய்திருக்கிறார்கள். படத்தை தயாரித்த நண்பர் விஜய், இயக்கிய சக்திவேல் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்னுடைய பங்காளி, நண்பர் விதார்த் படம் முழுவதும் அற்புதமாக நடித்திருக்கிறார். பேசாமல், தன்னுடைய உடல் மொழியால் ரசிகர்களை அழ வைத்திருக்கிறார். சிரிக்க வைத்திருக்கிறார். அவர் ஒரு முழுமையான நடிகர் என்பதை மீண்டும் இந்தப் படத்தில் நிரூபித்திருக்கிறார். அவர் மேலும் பல உயரங்களைத் தொட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

இது போன்ற தரமான படங்களை ஊக்குவிக்கும் ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தை பாராட்டுகிறேன். இது போன்ற நல்ல படங்களை வெளியிடுவதற்கு உங்களின் பேராதரவு தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

இதனிடையே ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தை பிரத்யேகமாக பார்வையிட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் தங்களது நேர்மறையான விமர்சனத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றி, இந்தப் படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

ஆஹா டிஜிட்டல் தளம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கும், சந்தாதாரர்களுக்கும் பல்வேறு வகையிலான ஒரிஜினல் படைப்புகளையும் வழங்கவிருக்கிறது. ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தைத் தொடர்ந்து கே. எஸ். ரவிக்குமார் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கூகுள் குட்டப்பா’, ஜீ வி பிரகாஷ்குமார் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஐங்கரன்’ மற்றும் முன்னணி இயக்குநர்களின் கைவண்ணத்தில் தயாராகி வரும் புத்தம் புதிய வலைத்தளத் தொடர்களும் ஆஹா ஒரிஜினல்ஸில் வெளியாகவிருக்கிறது.

YouTube video