Bodhai Eri Puthi Mari Tamil Movie Information is here.! | Kollywood Cinema news | Tamil Cinema News | Trending Cinema news

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, ஜீவி போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இந்த சூழலில் நல்ல கதையம்சத்துடன் அடுத்து வெளியாகும் திரைப்படம் “போதை ஏறி புத்தி மாறி”.

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீனிதி சாகர் தயாரிக்க, சந்துரு கேஆர் இயக்கியிருக்கிறார். தீரஜ், துஷாரா மற்றும் பிரதாயினி சுர்வா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, கே.பி இசையமைத்திருக்கிறார்.

பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த போதை ஏறி புத்தி மாறி தலைப்புக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தன. ஆனால் இந்த தலைப்பு தான் வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். நிறைய கதைகள் கேட்டேன், ஏற்கனவே கேட்ட மாதிரி கதைகளாகவே இருந்தன.

அந்த சமயத்தில் இயக்குனர் சந்துரு ஒரு ஒன்லைன் சொன்னார். மிக நன்றாக இருந்தது, அப்போதே முழு கதையையும் சொல்லச் சொல்லி கேட்டேன். அடுத்து என்ன என்பதை கணிக்க முடியாத அளவுக்கு மிகச்சிறப்பாக எழுதியிருந்தார்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் சார் படத்தின் மிகப்பெரிய தூணாக இருந்தார். ஒரு சிறிய இடத்தில் படம் பிடிக்க வேண்டிய நிறைய சவால்கள் இருந்தாலும் மிகச்சிறப்பான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்.

நாயகன் தீரஜ் ஒரு மருத்துவர், அவர் இந்த படத்தில் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார். கேபி இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

பிரதாயினி, துஷாரா இருவருமே அழகான, திறமையான நாயகிகள். கடந்த மாதம் படத்தை பார்த்த, தணிக்கை குழுவினர், எல்லோரும் கண்டிப்பா பார்க்கணும் என சொல்லி படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்தனர் என்றார் தயாரிப்பாளர் சாகர்.

பள்ளி நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு படம் பண்ணியிருக்கிறோம். தீரஜ் வைத்து ஒரு படம் பண்ணலாமா என கேட்டார் இயக்குனர். முதல் பட இயக்குனருக்கு எப்போதுமே ஒளிப்பதிவு தான் பக்க பலம்.

பாலசுப்ரமணியம் சார் ஒளிப்பதிவாளர் என்று தெரிந்த பிறகு எனக்கு நம்பிக்கை அதிகமானது. ஒரு படத்தில் வேலை செய்த அசதியே இல்லை, நிறைய விஷயங்கள் முயற்சி செய்து பார்க்க முடிந்தது என்றார் படத்தொகுப்பாளர் சாபு ஜோசஃப்.

சீமராஜா படம் பார்த்து விட்டு வரும்போது, எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. என்னை நடிக்க கேட்டார்கள், யாரோ கலாய்க்கிறார்கள் என்று தான் நினைத்தேன்.

ஆனால் உண்மையில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இயக்குனர் மிகவும் அமைதியானவர், புது நடிகரிடம் கூட மிகவும் எளிமையாக பழகுபவர். இது ஒரு நல்ல, வித்தியாசமான முயற்சி, எல்லோருக்கும் பிடிக்கும் என்றார் நடிகர் ஆஷிக்.

பள்ளி நாட்களில் இருந்தே எனக்கு இசையின் மீது ஆர்வம். தீரஜும், நானும் அப்போதில் இருந்தே நண்பர்கள். நான் படம் பண்ணா நீ தான் இசையமைப்பாளர் என சொன்னார். அது இப்போது நிகழ்ந்திருக்கிறது. படத்துக்கு என்னவெல்லாம் தேவையோ அதை எல்லாம் கொடுத்தார் தயாரிப்பாளர்.

தீரஜ் ஒரு டாக்டராக இருந்தாலும், அனுபவம் வாய்ந்த நடிகர் போல நடித்திருக்கிறார். பிரதாயினி ஒரு சூப்பர் மாடல், அவரின் முதல் திரைப்படம் இது. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம்.

இந்த படத்தில் மொத்தம் 3 பாடல்கள். ஒரு பாடலை யோகி பி பாடியிருக்கிறார். சமீபத்தில் முழு படத்தையும் பார்த்தோம், மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என்றார் இசையமைப்பாளர் கே.பி.

உதயநிதி சார் மூலம் தான் எனக்கு தீரஜ் அறிமுகம். அவர் ஒரு மருத்துவர். என் மனைவி மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது உயிரை கொடுத்து காப்பாற்றியவர் தீரஜ்.

அந்த நன்றிக்கடனுக்கு நான் செய்த படம் தான் இது. இயக்குனர் ஜெட் ஏர்வேஸில் பணிபுரிந்தவர். நல்ல கதையுடன் வந்தார். மிகச்சிறந்த படமாக வந்திருக்கிறது என்றார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம்.

சின்ன வயதில் இருந்தே நடிகையாகும் கனவு மட்டுமே எனக்கு இருந்தது. படத்தில் நான் திரையில் தோன்றும் நேரம் மிகக்குறைவு தான், ஆனாலும் இந்த மாதிரி ஒரு நல்ல படத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் நடிகை துஷாரா.

இதற்கு முன் நான் எந்த கதையையும் கேட்டதே இல்லை. ஏனெனில் நான் சினிமாவில் நடிப்பேன் என நினைத்ததே இல்லை. இயக்குனர் சந்துரு நடிக்க கேட்டபோது, ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்ற உணர்வு ஏற்பட, உடனே ஓகே சொல்லி விட்டேன்.

மைம் கோபி சாரிடம் கொஞ்சம் நடிப்பு பயிற்சி எடுத்தேன். படப்பிடிப்பு எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. அடுத்து என்ன, அடுத்து என்ன என யோசிக்க வைக்கும் படமாக இருக்கும். எனக்கு பிடித்த மாதிரியே உங்களுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்றார் நடிகை பிரதாயினி.

எனக்கு இந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்தவர் தீரஜ். குறும்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு ஐடியா கிடைத்தது. அதை அவரிடம் சொன்னபோது நல்லா இருக்கு பண்ணலாம்னு சொன்னார். முதன் முதலில் பாலசுப்ரமணியம் சாரிடம் கதை சொல்ல அனுப்பினார்.

கதையை கேட்டு, அவர் என்னை ஊக்கப்படுத்தினார். ஒரே வீட்டில் நடக்கும் கதை, நடிக்கும் எல்லோரும் மிகவும் ஆர்வமாக இருந்தனர். தெலுங்கு நடிகர் அஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்துக்கு சவுண்ட் மிக்ஸிங் ஒரு முக்கிய அம்சம். ஒட்டுமொத்த குழுவும் எனக்கு ஆதரவாக இருந்தனர். நான் ஒரு ரசிகனாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன். தலைப்புக்கு மிகவும் பொருத்தமான படமாக இருக்கும் என்றார் இயக்குனர் கேஆர் சந்துரு.

சிறுவயதில் இருந்தே நடிக்கும் ஆசை எனக்கு இருந்தது. என் ஆசைக்காக நேரம் கிடைக்கும்போது நடிக்க ஆசைப்படுகிறேன். அதே நேரத்தில் நான் படித்த மருத்துவத்தை கை விடாமல், தினமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

ஸ்கூல் பசங்க எல்லாம் சேர்ந்து படம் எடுத்திருக்கோம்னு நண்பர்கள் சொன்னாங்க. எங்களுக்கு ஹெட் மாஸ்டராக இருந்தவர் பாலசுப்ரமணியம் சார் தான். அவர் இல்லையேல் இந்த படம் சாத்தியமாகி இருக்காது, வரும் ஜூலை 12ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது என்றார் நடிகர் தீரஜ்.

இந்த சந்திப்பில் பாடலாசிரியர் முத்தமிழ், நடன இயக்குனர் ஷெரிஃப், நடிகர்கள் அர்ஜூனன், செந்தில், ரோஷன், சரத் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.