BJP invite Rajinikanth  : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Political News, Tamil nadu, Politics, BJP

BJP invite Rajinikanth  :

சென்னை: தமிழக பா.ஜ.க. மாநிலத்தலைவர் பதவிக்கு ரஜினிகாந்த் நியமிக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியதை அடுத்து, ரஜினிகாந்த் அதனை மறுத்து விட்டதாக பரபரப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த கோரிக்கை அவரது ரசிகர்கள் மத்தியில் மேலும் வலுத்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை ரஜினிகாந்த் நடத்தினார்.

அப்போது ரஜினிகாந்த், அரசியலுக்கு தான் வருவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இருப்பினும், இந்த அறிவிப்பை வெளியிட்டு, 1ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், ரஜினிகாந்த் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்து வருகிறது.

அதோடு மட்டுமின்றி, நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு மவுனத்தையே பரிசாக தந்தார்.

அவ்வப்போது, மத்திய அரசுக்கு ஆதரவாக சில கருத்துக்களை ரஜினிகாந்த் தெரிவித்து வந்ததால் அவர் கட்சியை தொடங்கினாலும், பா.ஜ.க.வுடன் இணைந்தே செயல்படுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இந்தநிலையில், தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து காலியான தமிழக பா.ஜ.க. மாநிலத்தலைவர் பதவிக்கு ரஜினிகாந்த் நியமிக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் டெல்லி பாஜக மேலிடமும் இதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது.

இந்நிலையில் ரஜினிகாந்த் அதனை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் தன்னை தொடர்பு கொண்ட பாஜக மூத்த நிர்வாகிகளிடம், “தான் இப்போது ‘ தர்பார் ‘ படப்பிடிப்பில் தீவிரமாக இருப்பதாகவும், தன்னுடைய ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று தனிக்கட்சி தொடங்கவே விரும்புவதாகவும்” கூறியுள்ளார் .

மேலும் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு, தை மாதத்திற்கு பின்னர் தனது தனிக்கட்சியை அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சியை பதிவு செய்யும் பணிகளை துவங்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.