தலைவர் 170 திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய திரை உலகில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினி அடுத்ததாக நடிக்க இருக்கும் “தலைவர் 170” திரைப்படம் குறித்த சூப்பரான அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, ஜெய் பீம் படம் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக இருக்கும் “தலைவர் 170” என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் நடிகர் ரஜினி நடிக்க இருக்கிறார். அனிருத் இசையமைப்பில் உருவாக இருக்கும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டாக இப்படத்தில் ரஜினிக்கு இணையான முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி சுவாரசியத்தை கூட்டி உள்ளது. ஏற்கனவே இவர்கள் இருவரும் 1991 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘ஹம்’ திரைப்படத்தில் நடித்துள்ளனர். தற்போது நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடிகர் அமிதாப் பச்சன் நேரடியாக நடிக்கும் முதல் தமிழ் படமும் இதுதான் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.