Ajith_Vjay

Ajith vs Vijay fans Rivalry on Twitter :

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய், அஜித் படங்களின் அப்டேட்கள்தான் இன்று சமூக வலைதள ரசிகர்களுக்கான முழு தீனி.

இவர்கள் நடித்த படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரைலர் போன்ற முன்னோட்டங்கள் வெளிவந்தாலோ அல்லது பொது இடங்களில் இவர்கள் இருவரும் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியானாலோ அதை தேசமே திரும்பி பார்க்கும் அளவில் டிரெண்ட் செய்வதை இவர்கள் ஒரு கடமையாகவே கடைபிடித்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் அஜித் பட டீசர் சாதனையை விஜய் ரசிகர்கள் முறியடிப்பதும் பின்னர் விஜய் பட சாதனையை அஜித் ரசிகர்கள் முறியடிப்பதும் என மாறி மாறி இந்த போட்டி நிலவி வந்தது. ஆனால் தற்போது ஒரே நேரத்தில் யாருடைய ஹேஷ் டாக் அதிகளவில் டிரெண்டாகிறது எனும் புதிய போக்கை இவ்விரு தரப்பினரும் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் அண்மையில் விஜய்யின் 45-வது பிறந்தநாள் வந்தது. இதை விமரிசையாக கொண்டாட நினைத்த அவருடைய ரசிகர்கள், #happybirthdayTHALAPATHY, #HBDEminentVijay ஆகிய ஹேஷ் டாக்ளை தேசிய அளவில் டிரெண்ட் செய்து அசத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்க நினைத்த அஜித் ரசிகர்கள், #என்றென்றும்_தலஅஜித் எனும் ஹேஷ் டாக்கை உருவாக்கி அதில் அஜித் புகழ் பாடத்தொடங்கினர்.

சரசரவென இந்த ஹேஷ் டேக்கில் டிவீட்கள் குவிய, விஜய் ஹேஷ் டாக்கை ஓரங்கட்டி தேசிய அளவில் முதல் இடம் பிடித்தது #என்றென்றும்_தலஅஜித் ஹேஷ் டாக்.

இப்படியான தருணத்தில்தான் விஜய்யின் பிகில் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதற்கு எதிராக அஜித் ரசிகர்கள் மீம்ஸ்களை உருவாக்கி பங்கம் செய்ய தொடங்கியதும் அஜித்தின் நேர்கொண்ட பார்வையை கலாய்க்க விஜய் ரசிகர்கள் ஆயித்தமானார்கள்.

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் வக்கீலாக நடித்திருப்பதால் வடிவேலுவின் வண்டு முருகன் கதாபாத்திரத்தையும் இதையும் இணைத்து #வண்டுமுருகன்அஜித் எனும் ஹேஷ் டாக்கை உருவாக்கி ஐந்தே மணிநேரத்தில் அதில் பத்து லட்சத்துக்கும் அதிகமான டிவீட்களை பதிவேற்றம் செய்து மிரட்டினார்கள்.

இதற்கு எதிராக #கைப்புள்ளவிஜய் எனும் ஹேஷ் டாக்கை ஆயுதமாக கையில் எடுத்த அஜித் ரசிகர்கள் அதையும் போட்டிபோட்டு டிரெண்ட் செய்ய தொடங்கியதால் நேற்று சமூக வலைதளங்கள் முழுவதும் ரசிகர்களின் இந்த இணையப் போரே பேசுபொருளாக மாறியது.

ஆரம்பத்தில் விஜய்யும் அஜித்தும் தங்களுடைய படங்களில் ஒருவரை தாக்கி ஒருவர் வசனம் பேசியிருந்தாலும் தற்போது ரசிகர்களின் இந்த மோதலை நினைத்து பெரிதும் வருந்துகிறார்கள்.

தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எதிர்மறையான விஷயங்களை புறக்கணியுங்கள் என விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

அறிக்கை விட்ட அஜித் இதையும் சொல்லணும் – சீமான் ஓபன் டாக்.!

அஜித்தும் தன் ரசிகர்கள் குடும்பத்திற்காகவும் அவர்களுடைய தொழிலிலும் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என அறிக்கைகள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அண்மையில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் டீசரில் கூட ”ஒருவர் மீது நீங்கள் விஸ்வாசம் காட்டுவதற்கு இன்னொருவரை ஏன் அசிங்கப்படுத்துறீங்க” என அஜித் தன் ரசிகர்களுக்கு வெளிப்படையாகவே அறிவுரை கூறியிருக்கிறார்.

ஆனால் இவர்கள் இருவரையும் தங்களது ஆதர்ச நாயகர்களாக ஏற்றுகொண்ட ரசிகர்கள் இவர்கள் கூறும் அறிவுரைகளை மட்டும் ஏற்றுகொள்வதாக இல்லை.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.