தந்தையின் மரணம் குறித்து அஜித் கோரிக்கை ஒன்றை வைத்து உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது தந்தை சுப்பிரமணியன் கடந்த நான்கு வருடங்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

இவரது மறைவு அஜித் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் தனது தந்தையின் மறைவு குறித்து அஜித் உருக்கமான கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்.

தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.