AIADMK Manifesto
AIADMK Manifesto

சென்னை : மக்களவை தேர்தலுக்கான அதிமுக அறிக்கை வெளியிடப்பட்டது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் போன்ற பல அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு முன்பு தேர்தல் அறிக்கையை வைத்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அனைவரும் மரியாதை செலுத்திய பின்னர், மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார்.

அதிமுக தேர்தல் அறிக்கைகள் பின்வருமாறு:

*தமிழ்மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல்மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* வீணாகும் தண்ணீரை பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

* காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வங்கி கணக்கில் உதவித் தொகையாக ரூ.1,500 வழங்கப்படும்.

*கைவிடப்பட்ட பெண்கள், நிலமற்ற விவசாய கூலித்தொழிலாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 1,500 வழங்கப்படும்.

*எம்.ஜி.ஆர் திறன் வளர்ச்சி திட்டத்தில் மூலமாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

*புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: பயிற்சிகள் அளிக்கப்படும்.

*மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்.

*நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்துவோம்.

*எஸ்.சி/ எஸ்.டி/ பி.சி/ எம்.பி.சி மக்களுக்காக புதிய இடஒதுக்கீட்டு சட்டம் கொண்டு வரப்படும்.

*இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க புதிய அமைப்பு ஒன்று தேசிய அளவில் உருவாக்கிட வலியுறுத்தப்படும்.

*கடலில் கலக்கும் நீர் வறட்சியால் பாதிக்கப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

*வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பகுதிகளுக்கு நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.

*மேற்குதொடர்ச்சி மலையில், பருவமழைக் காலங்களில் பெறும் நீரை பயன்படுத்த தடுப்பணை, நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.

*காவிரி இணைப்பு கால்வாய் திட்டம் கொண்டு வரப்படும்.

*கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தப்படும்.

*வேளாண் கடன்களுக்காக உறுதியான திட்டம் ஒன்றை கொண்டு வருவோம்.

*தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

*பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க மத்திய அரசையும், குடியரசு தலைவரையும் வலியுறுத்துவோம்.

*பொது சிவில் சட்டத்தை நடைமுறைபடுத்தக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துவோம்.

*காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம்.

*புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

*மதம் மாறினாலும் சாதிரீதியான இடஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

*இலங்கை இன படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.