Soorarai Pottru Suriya

சூரரை போற்று அனுபவம், கிளியரன்ஸ் சர்டிபிகேட் கிடைக்காமல் போக என்ன காரணம்?? என்பதை பற்றியெல்லாம் நடிகர் சூர்யா பேட்டி அளித்துள்ளார்.

Actor Suriya Interview About Soorarai Pottru : ஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருப்போம். அப்படி சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.

சூர்யாவின் நடிப்பு, சுதாவின் துல்லியமான இயக்கம், ஜிவிபிரகாஷின் மிரட்டலான இசை என அனைத்துமே இந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

தீபாவளிக் கொண்டாட்டமாக நவம்பர் 12-ம் தேதி 200-க்கும் அதிகமான நாடுகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. முதன்முறையாக ‘சூரரைப் போற்று’ படம் குறித்து பேட்டியளித்துள்ளார் சூர்யா. அது பின்வருமாறு:

‘சூரரைப் போற்று’ படத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், கதாபாத்திரம் குறித்து..

சில படப்பிடிப்புகளில் தான் ரொம்ப பிடித்த விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘மெளனம் பேசியதே’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட சில படப்பிடிப்புகளில் எனக்கு அப்படித் தோன்றியது. மறுபடியும் ஒரு புதிய அனுபவத்துக்குள் போகிறோம், புதுசா ஒரு கற்றல் நடக்குது என்று சொல்வது மாதிரி இந்தப் படம். ‘சூரரைப் போற்று’ படத்தின் படப்பிடிப்பு 60 நாட்கள் தான் நடைபெற்றது. ஒவ்வொரு நாளுமே இதுவரை பண்ணாத விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறேன் என நினைத்தேன். அது ரொம்பவே ப்ரஷ்ஷாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. மறுபடியும் சினிமாவை ரொம்ப ரசித்து, சந்தோஷமாக நடித்தது ‘சூரரைப் போற்று’ படப்பிடிப்பில் கிடைத்தது.

‘சேது’ பார்த்தவுடன் பாலா சாருடன் ஒரு படம் பண்ண வேண்டும் எனத் தோன்றியது. அப்படி, ‘இறுதிச்சுற்று’ படம் பார்த்துவிட்டு, இவரோடு ஒரு படம் செய்துவிட வேண்டும் எனத் தோன்றியது. எனக்கு ராக்கி கட்டிவிடும் சகோதரி சுதா கொங்கரா. நண்பர்களுக்குள் வியாபாரம் என்று வரும் போது, கருத்து வேறுபாடு வந்துவிடுமோ என நினைத்து நட்பாகவே இருப்போமே என்று கூறி தவிர்த்தது உண்டு. அப்படித்தான் சுதா கொங்கராவிடம் நிறைய விஷயங்கள் பேசுவோம், ஆனால் படம் பண்ணுவோம் என்று சீரியஸாக உட்கார்ந்து பேசியது கிடையாது.

‘இறுதிச்சுற்று’ பார்த்துவிட்டு என் கேரியர் முடிவதற்குள் இவரோடு ஒரு படம் செய்துவிட வேண்டும் என தவித்தேன். அப்படி செய்த படம் தான் ‘சூரரைப் போற்று’. என்னை வைத்து அவரால் அந்தக் கதாபாத்திரத்தைப் பார்க்க முடிந்தது. ரொம்ப அழகான ஒரு பயணமாக இருந்தது. இயக்குநராக அவருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம்

‘சூரரைப் போற்று’ படம் பெரிய பயணம். அந்த அனுபவம் எப்படியிருந்தது?

‘SIMPLY FLY’ என்ற புத்தகத்தில் உள்ள ஐடியாவாக இருந்தாலும், 44 பக்க கதையாக கொடுத்தார் சுதா கொங்கரா. அப்போதிலிருந்து பல மாறுதல்கள், ஒவ்வொரு காட்சிக்குமான மெனக்கிடல் என நானும் கூடவே பயணித்தேன். இந்த அனுபவம் எனக்கு வேறு எந்தவொரு படத்திலும் கிடைத்தது கிடையாது.

இந்தியாவின் முகத்தையே ஒரு சிலர் தான் மாற்றினார்கள். அதில் முக்கியமானவர் கோபிநாத். ஏனென்றால் விமான போக்குவரத்து துறையை அப்படியே மாற்றினார். அவரைப் பற்றிய விஷயங்களில் எதை எல்லாம் வைத்து கதையாக சொல்லலாம் என எடுத்து சுவாரசியமான திரைக்கதையாக எழுதியிருக்கிறார். பாட்டு, சண்டைக் காட்சி என்பதெல்லாம் இல்லாமல் வெறும் கதையை எமோஷனல் காட்சிகள் மூலமாகவே எந்தளவுக்கு நம்பவைக்க முடியும் என்பதை ‘சூரரைப் போற்று’ உருவான விதத்தின் மூலம் தெரிந்துக் கொண்டேன்.

எனக்கு ஒரு சில விஷயங்களை அழுத்தமாக சொல்வது பிடிக்கும். இதெல்லாம் முந்தைய படத்தில் பண்ணியிருக்க, அப்படி பண்ணாதே என்று சொல்லி சொல்லி படமாக்கினார் சுதா. படமாக திரையில் பார்க்கும் போது எனக்கொரு பாடமாக இருந்தது. சுதா இயக்கத்தில் என்னையே நான் வித்தியாசமாக பார்த்தேன். சிரிக்காதே என்று அடிக்கடி சொல்வார். படம் முழுக்க சிரிக்காமல் நடித்ததே பெரிய சவாலாக இருந்தது. ஒரு நடிகராக சுதாவின் இயக்கத்தைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தக் கதைக்காக சுதா கொங்கராவின் உழைப்பு பற்றி?

படப்பிடிப்பு இருக்கோ இல்லையோ, 4 மணிக்கு எழுந்துவிடுவார் சுதா கொங்கரா. ஒரு நாளைக்கான 24 மணி நேரத்தில், 4 – 5 மணி நேரம் மட்டுமே தூங்குவார். மற்ற நேரங்களில் இந்தப் படத்துக்குள் என்ன பண்ணலாம், இன்னும் என்ன மெருக்கேற்றலாம் என்பதை மட்டுமே சிந்திப்பார். ஒரு அறையில் உள்ள மனிதர்களில் ஒருவர் ரொம்ப சின்சியராக இருக்கிறார் என்றால் அவரைச் சுற்றியிருப்பவர்களும் அதை பின்பற்ற தொடங்குவார்கள்.

சில படப்பிடிப்பு தளங்களில் காலை 7 மணிக்கு தான் லைட் எல்லாம் இறக்கி வைப்பார்கள். ஆனால், சுதாவினால் காலை 6:40 மணிக்கு ஷாட் எடுக்க முடிந்தது. ஒட்டுமொத்த படப்பிடிப்பு தளமும் அதற்கு முன்னால் தயராக இருக்கும். சுதா கொங்கரா அவ்வளவு உழைத்ததால் தான், நாங்களும் அவரைப் பார்த்து உழைக்க முடிந்தது. யாருமே கொஞ்சம் கூட முகம் சுளிக்கவில்லை.

முன்னணி நடிகராக ஒரு பெண் இயக்குநருடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?

பள்ளி, கல்லூரியில் பெண்கள் ஆசிரியர்களாக வரும் போது கற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருப்போமா?. முன்பு திரைத்துறையில் பெண் இயக்குநர் என்ற பார்வை இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அனைத்துமே மாறிவிட்டது. விளையாட்டு தொடங்கி அனைத்து விஷயங்களிலுமே பெண்களிலிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள தொடங்கியுள்ளோம். பெண் இயக்குநராக இருந்தாலும், படப்பிடிப்பு தளத்தில் எந்தவொரு வித்தியாசமும் கிடையாது. ‘சூரரைப் போற்று’ படப்பிடிப்பு தளத்தில் சுமார் 200 பேரை அவருடைய கட்டுக்குள் வைத்திருந்தார். அனைவருமே அவருடைய கனவு நனவாக உழைத்திருக்கிறோம். சுதாவிடம் அடுத்தக் கதை எழுதும் போதும் என்னை நினைத்தே எழுது எனக் கேட்டிருக்கிறேன்.

நான், மாதவன், சுதா மூவரும் அடிக்கடி பேசிக் கொள்வோம். மாதவனுக்கு நான் நன்றி சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் ‘இறுதிச்சுற்று’ ஏற்படுத்திய தாக்கத்தால் தான், இந்த மாதிரியான படங்கள் பண்ண வேண்டும் எனத் தோன்றியது.

இந்தப் படத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால் எது?

இதில் மனைவியிடம் 12 ஆயிரம் ரூபாய் கடன் தர்றீயா என்று கேட்கும் அளவுக்கு உடைந்து போய் தரையோடு தரையாக இருப்பது மாதிரியான கேரக்டர். நான் ஒரு பிரமாதமான நடிகர் கிடையாது. என்னால் கேமிரா முன்னால் உடனே நடிக்க எல்லாம் முடியாது. ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும் போதே, அந்த கதாபாத்திரமாக வாழ வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு ஒரு கதையில் என் வாழ்க்கையில் நடந்த எமோஷன் இருந்தது என்றால் தைரியமாக நடிக்கத் தொடங்கிவிடுவேன். சுதாவை எனக்கு முன்பே நல்ல தெரியும் என்பதால், சில காட்சிகளுக்கு முன்பு நிறையப் பேசி நடித்தேன். அது ரொம்ப எளிதாகவே இருந்தது. அதே போல், ‘சூரரைப் போற்று’ படப்பிடிப்புக்கு முன்பே அனைத்து விஷயங்களுமே பேசி முடிவு செய்துவிட்டோம். ஆகையால் அனைத்து காட்சிகளுமே ஒரு டேக், 2 டேக் தான். சுதாவும் ரொம்பவே உணர்ச்சிமிக்க இயக்குநர். அவர் கண்களில் கண்ணீர் வரும் போது தான் சில காட்சிகள் ஓகே ஆகும்.

இந்தப் படத்தில் மொத்தம் 96 கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். ஒரு வசனம் பேசக் கூடிய கதாபாத்திரமாக இருந்தாலும், அலுவலகத்துக்கு வரவைத்து ஸ்கிரீன் டெஸ்ட் செய்துள்ளார் சுதா. க்ளைமேக்ஸுக்கு முந்தைய காட்சியில் டிரைவர் ஒரு வசனம் பேசுவார். அந்த டிரைவரை கூட ஒரு நடிகராக, ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பார்க்க முடியவில்லை. அந்த வசனம் படத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியது மாதிரி இருந்தது. அந்தளவுக்கு ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் மெனக்கிட்டுள்ளார் சுதா.

பி அண்ட் சி சென்டர் ரசிகர்கள் உங்களுக்கு அதிகம். அவர்களுக்கு அந்நியப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளீர்களே. இது எந்தளவுக்கு ரீச்சாகும் என நம்புகிறீர்கள்?

ஒரு ஊருக்கு போக்குவரத்து எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்குமே புரியும். ஒரு போக்குவரத்தின் மூலம் நினைத்த இடத்துக்கு போக முடிகிறது என்றால் மட்டுமே கல்வி, தொழில் அனைத்திலுமே மாற்றம் உண்டாகும். எல்லா வகையான போக்குவரத்தும், அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் நோக்கம். மாட்டு வண்டி, ஆட்டோ, பஸ் என இருக்காமல் விமான பயணம் கிடைத்ததாக இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு கனவின் எந்தளவுக்கு வைராக்கியம் இருந்தால், அது சாத்தியப்படும் என்று சொல்கிற படமாகவும் ‘சூரரைப் போற்று’ இருக்கும். இந்தப் படமே மதுரையில் தான் தொடங்கும். படத்தின் கதையே நீங்கள் கேட்ட மக்களிடமிருந்து தான் தொடங்கும். ஆகையால் எந்த தரப்பு மக்கள் பார்த்தாலும் இது அந்நியப்பட்ட கதையாக கண்டிப்பாக இருக்காது.

சமீபமாக நீங்கள் சொல்லும் சமூக கருத்துகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்தக் கருத்துக்களால் இந்தப் படத்துக்கு சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் இருந்ததா?

இதுவரை யாருமே விமானப்படை தளத்தில் போய் படப்பிடிப்பு செய்தது கிடையாது. பழுதடைந்த ஓடாத விமானத்தில் தான் படப்பிடிப்பு செய்திருப்பார்கள். ஆனால், நாங்கள் நிஜமான விமானம், ஜெட்களில் எல்லாம் படப்பிடிப்பு செய்திருக்கிறோம். பாலிவுட்டில் முக்கியமான தயாரிப்பாளர்களுக்கு கூட அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அந்த அனுமதி என்பது ஒரு பெரிய நடைமுறை. படத்தைப் பார்த்துவிட்டு அவர்கள் எதுவுமே சொல்லவில்லை. ஒவ்வொரு அலுவலகத்திலும் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி, இறுதியில் சான்றிதழ் கிடைத்தது. என்னுடைய தனிப்பட்ட கருத்துகளும் படத்தின் சான்றிதழ் தாமத்துக்கும் சம்பந்தமில்லை.

சினிமாவில் தொடர்ச்சியாக பயணித்து வெற்றி – தோல்வியை பார்த்துவிட்டீர்கள். எந்த விஷயம் உங்களை முன்னோக்கி ஓட வைக்கிறது?

ஏன் பண்ணக் கூடாது, இந்த முயற்சியை ஏன் எடுக்கக் கூடாது என்பது தான் காரணம். நான் நினைத்துப் பார்க்காத ஒரு இடமும் எனக்கு தரப்பட்டுள்ளது. மறுபடியும் மறுபடியும் நல்ல வாய்ப்புகள் வரும் போது, ஏன் மெனக்கிடக் கூடாது என்ற விஷயம் தான். ஒவ்வொரு புது முயற்சியும் நமக்கு பயத்தைக் கொடுக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே ஒரு வளர்ச்சி இருக்கும், அடுத்த கட்டத்துக்குப் போக முடியும் என்பது என் நம்பிக்கை. அப்படி வரும் அனைத்து கதைகளுமே நம்மை பயமுறுத்தி, சவாலாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ‘சூரரைப் போற்று’ மாதிரியான வாய்ப்பு வரும் போது, விட்டுவிடக் கூடாது என்பது தான். திடீரென்று சுதா என்னை இந்தப் படத்தில் 18 வயது பையனாக நடிக்க வேண்டும் என்று சொன்னார். கடைசி வரை வேறு யாரைவாது வைத்து செய்துவிடுங்கள், எனக்கு 45 வயதாகப் போகிறது எனச் சொன்னேன். விமான போக்குவரத்தை வைத்து இதற்கு முன்பு யாரும் இவ்வளவு பெரிய படமெடுத்தது கிடையாது. ஆகையால், இதில் நிறைய விஷயங்கள் முதல் முயற்சியாக இருந்தது. அப்படியிருப்பதால் மட்டுமே சமரசமில்லாமல் நம்மளே தயாரிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.

அவ்வளவு பெரிய விமான போக்குவரத்து துறையில் எப்படி ஒருவர் 1 ரூபாய்க்கு டிக்கெட் விற்றார். அவருடைய சவாலான வாழ்க்கை நம்மிடம் வரும் போது, எப்படி நடிக்காமல் விட முடியும் என்பது தான்.
18 வயது பையனாக நடித்த அனுபவம்.

மீசை, தாடியுடன் எல்லாம் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்கிவிட்டு, அடுத்த நாளே 18 வயது பையனாக நடிக்க வேண்டியதிருந்தது. ஆகையால், ஒரே சமயத்தில் அதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். வருடம் முழுக்க உடலமைப்பில் ஒரு ஒழுக்கத்தை பின்பற்றி வருகிறோம். வருடம் முழுக்க 80% உடற்பயிற்சி செய்துக் கொண்டிருக்கும் போது, இந்த கதாபாத்திரத்துக்கு 100% உடற்பயிற்சி செய்ய வேண்டியதிருந்தது அவ்வளவு தான். அதுவும் முதல் நாள் படப்பிடிப்பில் முகத்தில் கிராபிக்ஸுக்காக மார்க் எல்லாம் வைத்தார்கள். ஆனால் நானே அந்த வயதுக்கு பொருத்தமாக இருக்கிறேன் என்று விட்டுவிட்டார்கள்.

ட்ரெய்லர் நிறைய காட்சிகள் ரொம்ப மாஸாக இருந்தது. கதையாக கேட்கும் போது எப்படி உணர்ந்தீர்கள்?

ட்ரெய்லரில் பார்த்த மாதிரி நிறைய காட்சிகள் படத்தில் இருக்கிறது. ஊர்வசி மேடம், மோகன் பாபு சார், பரேஸ் ராவல் சார், காளி வெங்கட், கருணாஸ் என அனைவருமே சும்மா ஒரு படத்துக்குள் வந்துவிட மாட்டார்கள். எத்தனை பேருக்குமே அவர்களுடைய வாழ்க்கையில் ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடிய வசனங்களோ, காட்சிகளோ இந்தப் படத்தில் இருக்கும். அப்படியொரு கதை, திரைக்கதையை சுதா உருவாக்கியிருந்தார். எவ்வளவு நல்ல சினிமா பண்ண முடியும் என்பது சுதா மாதிரி அனைத்து இயக்குநர்களும் பொறுமையாக இருக்க வேண்டும். 2 வருடங்கள் ஆனாலும் உயிரைக் கொடுத்து எழுத வேண்டும். அப்படி எழுதினால் கோடிக்கணக்கான பேருக்கு ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்க முடியும்.

இரண்டரை வருட பயணம், அதிகமான பொருட்செலவு அடங்கியிருக்கிறது. இந்தச் சமயத்தில் நீங்கள் 2- 3 படங்களில் நடித்திருக்கலாம். எதற்காக ரிஸ்க் எடுக்கிறீர்கள்?

புகழுக்காகவோ, நம்மளும் இந்தத் துறையில் இருக்கிறோம் என்பதற்காக சினிமா பண்ண மாட்டேன். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். எந்தக் கனவும் பெரியது கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும். அனைத்துமே யாரை சந்திக்கிறோம், யார் நம்மை என்ன செய்ய வைக்கிறார்கள் என்பது தான். இந்தக் கதையைக் கேட்டவுடன் ஏன் நம்ம பண்ணக் கூடாது எனத் தோன்றியது. அதற்குக் காரணம் சுதாவின் எழுத்தில் இருந்த வீரியம் தான். அது தான் அனைத்து நடிகர்களையும் ஒன்று சேர்த்தது என்று சொல்வேன். இந்தப் படம் பட உருவாக்கம், கதை தேர்வு என அனைத்து விஷயத்திலும் என்னை கேள்வி கேட்க வைத்துள்ளது என்று சொல்வேன்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.