Actor Nani in V Movie Update : ‘வி’ வெளியாகும் செப்டம்பர் 5ன் முக்கியத்துவம் குறித்து நானி பேசியுள்ளார்.

திறமையானவர்கள் ஒன்று திரண்டுள்ளனர் என்பதைத் தாண்டி இன்னும் பல சிறப்புகளை நானி, சுதீர் பாபு நடிக்கும், ‘வி’ திரைப்படம் கொண்டுள்ளது. வெளியீடு தேதியான 5 செப்டம்பர் தான் அனைத்தையும் ஒன்றிணைக்கிறது.

‘வி’, நானியின் திரை வாழ்க்கையில் 25வது திரைப்படம். இயக்குநர் மோகன கிருஷ்ணா இந்திராகாந்தியுடன் நானியின் மூன்றாவது திரைப்படம். நானியின் அறிமுகத் திரைப்படமான ‘ஆஷ்தா சம்மா’வின் இயக்குநரும் மோகன கிருஷ்ணாவே. 12 வருடங்கள் கழித்து இருவரும் ‘வி’ திரைப்படத்திலும் இணைந்துள்ளனர்.

தனது 12 வருட பயணம் குறித்து பேசியிருக்கும் நானி, “நான் எப்போதுமே நல்ல நடிகனாக, ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்குத் தருபவனாக இருக்க வேண்டும் என்றே நினைத்தேன். ‘ஆஷ்தா சம்மா’ வெளியாகி 12 வருடங்கள் கடந்து விட்டன. ‘வி’ திரைப்படம் மூலம் அற்புதமான மனிதர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

தெலுங்கு ரசிகர்கள் என்னை அவர்களில் ஒருவனாகப் பார்ப்பதை எனக்குக் கிடைத்த ஆசிர்வதமாக உணர்கிறேன். ஒவ்வொரு படம் நடிக்கும் போதும் எனது பொறுப்பு அதிகமாகிறது. ரசிகர்களின் பொழுதுபோக்குக்குத் தொடர்ந்து நல்ல திரைப்படங்களைத் தருவேன். ‘வி’ திரைப்படத்தை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றி. என் மீது என்றும் அன்பைப் பொழியும் ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

நானியுடனான தனது தொடர்பு குறித்துப் பேசியிருக்கும் இயக்குநர் மோகன கிருஷ்ணா இந்திராகாந்தி, “கண்ணில் ஏதோ பிரச்சினை இருந்ததால் கண்ணை மறைக்கும் கருப்புக் கண்ணாடி அணிந்து என் அலுவலகத்துக்குள் வந்த வித்தியாசமான இளைஞனான நானி இன்று இருக்கும் நிலை என்பது, அவரது அற்புதமான பயணமே.

அந்தத் திறமையை அறிமுகம் செய்ததற்காக நான் கொஞ்சம் பொறுப்பை எடுத்துக் கொள்கிறேன். நானியோடு சேர்த்து பல நல்ல திறமையாளர்களை நான் அறிமுகம் செய்திருக்கிறேன். ஆனால் எனது அறிமுகத்துக்குப் பிறகு அவர் சாதித்த அத்தனைக்கும் அவரே பொறுப்பு.

நானி கடுமையாக உழைத்தார், துணிந்து இடர்களை சந்தித்தார், அவரிடம் இருக்கும் ஒரு முக்கியமான குணம், ஆபத்துகளை எதிர்கொள்ள அவர் என்றுமே தயங்கியதில்லை. வழக்கத்தை மீறி அவர் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார், துணிந்து சில முயற்சிகள் செய்தார், கீழே விழுந்தார், எழுச்சி கண்டார், முதல் நாளிலிருந்தே அவரிடம் நான் கண்டு வியக்கும் தன்மை இது.

எங்கள் உறவில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. நாங்கள் அப்படியேதான் இருக்கிறோம். 2016-ஆம் ஆண்டு நாங்கள் எடுத்த ‘ஜென்டில்மேன்’ திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது.

ஒரு நடிகராக நன்றாக முதிர்ச்சி பெற்றுள்ளார், நிறைய கற்றுக்கொண்டிருக்கிறார். வித்தியாசமான கதைகளுக்கு, கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு அவரால் மாற முடியும். அப்படி மாறும் தன்மை ஒரு தனித்துவமான அம்சம். பிறக்கும் போதே ஒருவருக்கும் இருக்கும் திறமை. அதை ஒருவருக்கும் நாம் கற்றுத் தர முடியாது. அதுதான் அவரை பெரிய நட்சத்திரமாக்கியுள்ளது.

நானியின் 25-வது படமான இது, ஒரு முழுநீள பொழுதுபோக்குத் திரைப்படம். ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக நகரும். அதிக வணிகமயமான துறையான தெலுங்கு திரைத்துறையில் இப்படி ஒரு படம் எடுப்பது எளிதல்ல. வழக்கமான படங்களுக்கு நேர்மாறாக இருக்கும் வித்தியாசமான படங்களை தேர்வு செய்வதும், அதில் வெற்றி பெற்று தனக்கென ஒரு பெயர் பெறுவதும் மிகப்பெரிய சாதனை.

அவரை அறிமுகப்படுத்தியவன் என்கிற ரீதியில் அது எனக்கு அதிகப் பெருமையைத் தருகிறது. ஆனால் அதைத் தாண்டி அவரே தான் சுய முயற்சியில் வளர்ந்து இன்று ஒளிர்ந்து கொண்டிருக்கிறார் ” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

மோகன கிருஷ்ணா இந்திராகாந்தி எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், ‘நேச்சுரல்’ ஸ்டார் நானி மற்றும் சுதீர் பாபு முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, உடன் நிவேதா தாமஸ், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்டும் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘வி’, அமேசான் ப்ரைம் தளத்தில் செப்டம்பர் 5, 2020 முதல் ஸ்ட்ரீமிங்கில் காணக் கிடைக்கும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.