நடிகர் கவினின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் கவின். சின்னத்திரையில் அறிமுகமான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானார். இதனைத் தொடர்ந்து வெள்ளி திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவரது நடிப்பில் கடந்த மாதம் கணேஷ் கே பாபு இயக்கத்தில் “டாடா” திரைப்படம் வெளியானது.

இதில் இவருக்கு ஜோடியாக அபர்ணாதாஸ் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இப்படத்தை தொடர்ந்து நடிகர் கவின் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையமைப்பில் உருவாக இருக்கும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்க டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான நடிகை பிரியங்கா மோகன் இணைய இருப்பதாகவும் இது தொடர்பாக அவரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் புதிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.