தளபதி விஜய் குறித்து பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி பகிர்ந்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் ரசிகர்கள் கொண்டாடும் இளைய தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் வாரிசு திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாபெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக காஷ்மீரில் நடைபெற்றதை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இணைந்திருக்கும் பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி தளபதி விஜய் குறித்தும் லியோ படம் குறித்தும் பகிர்ந்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

அதில், “விஜய் மிகவும் பணிவாகவும், அன்பாகவும் நடந்து கொண்டார். நான் நடித்த பூவிழி வாசலிலே, சூரியன், விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற திரைப்படங்களை அவர் மிகவும் ரசித்ததாகவும், அவர் எனது ரசிகர் என்றும் கூறினார். எனக்கு இது மிகவும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவரைப் போன்ற ஒருவரிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகளை கேட்டதால் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். மேலும், லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவருமே அன்புடன் நடந்துகொண்டார்கள். இவ்வாறு கிடைப்பது ஒரு வரம். இத்தனைக்கும் விஜய் மற்றும் அனைவரையும் இப்போதுதான் முதல்முறையாக சந்தித்தேன்” என பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.