96 Movie

96 The Movie : ஒரு படைப்பிற்கான அங்கீகாரம் என்பது உயரிய விருதுகளால் மட்டும் கொண்டாடப் படுவது அல்ல. உணர்வுப் பூர்வமான விருதுகளாலும் கொண்டாடப்படுவது தான். அப்படியான ஒரு உணர்வுப் பூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது விஜய்சேதுபதி, திரிஷா நடித்து ப்ரேம் இயக்கிய 96 திரைப்படம்.

தமிழில் பெற்ற பெரு வெற்றியைத் தொடர்ந்து 96 படத்தை தெலுங்கிலும் இயக்கி வருகிறார் ப்ரேம். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குநருமான மாருதிராவின் மகன் அமரர் கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாக வழங்கப்படும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை இயக்குநர் ப்ரேம் பெற இருக்கிறார்.

தெலுங்கு சினிமா உலகம் மட்டும் இல்லாமல் மொத்த இந்தியத் திரையுலகுமே இந்த விருதை மிகவும் உணர்வுப்பூர்வமான விசயமாக கருதுகின்றனர். அதற்கான காரணமும் இருக்கிறது.

அது 1992-ம் ஆண்டு! தனது முதல்படமான ‘பிரமே புஸ்தகம்’ என்ற படத்தை இயக்கி வந்த ஸ்ரீனிவாசன் துரதிருஷ்டவசமாக காலமானார். நடிகர் அஜித் கதாநாயகனாக நடித்த அப்படத்தின் மீதியை மாருதிராவ் இயக்கி முடித்தார்.

ஒரு படத்தை முழுமையாக இயக்கும் முன் மரணம் தழுவிக்கொண்ட அந்த படைப்பாளியின் கனவுக்கு மரியாதை செய்யும் விதமாக “கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் தேசியவிருது” என்னும் விழா 21 வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

முதல்படத்தை வெற்றிகரமாக இயக்கி அதை மக்கள் மனங்களில் கொண்டாட வைத்த முதல்பட இயக்குநர்களுக்குத் தான் இந்த உணர்ச்சிகரமான விருதை வழங்குவார்கள். அந்த வகையில் இன்னும் 96 வருடங்கள் கடந்தாலும் நம் மனதை இதமாக வருடும் 96 படத்தைத் தந்த இயக்குநர் ப்ரேமிற்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை வழங்க இருக்கிறார்கள்.

இந்த விருது குறித்து இயக்குநர் ப்ரேம் பேசும்போது, “எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எப்படியான விருதுகளாக இருந்தாலும் விருதுகள் நம்மை ஊக்கப்படுத்துபவை தான்.

ஆனால் இப்படியான விருதை பெற இருக்கிறோம் என்று கேள்விப்பட்டதும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். எனக்கு வாழ்த்து கூறிய பலரும் ‘கங்க்ராட்ஸ்’ என்பதோடு கடந்துவிடவில்லை.

ஒவ்வொருவரும் இதைப்பற்றி மிகவும் உணர்வுப் பூர்வமாக பேசினார்கள். விஜய்சேதுபதி திரிஷா உள்ளிட்ட பலரும் தங்களின் மகிழ்ச்சியை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்கள்.

தற்போது படத்தைத் தெலுங்கில் இயக்க இருக்கும் நிலையில் இப்படியான விருது கிடைத்திருப்பது பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது” என்றார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.