24 State Farmers
24 State Farmers

24 State Farmers – டெல்லி: “கடன் நிவாரணம், வங்கிகடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு உரிய விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 24 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்தி வருகின்றனர்” .

முதல் நாளான நேற்று முன்தினம் பேரணியில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் குவிந்தனர்.

இதில் தமிழகம், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் அரியானா உள்ளிட்ட சுமார் 207 விவசாய சங்கங்கள் கலந்து கொண்டனர்.

மேலும், ‘தமிழகத்தின் சார்பாக, தென் இந்திய விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் 1,500க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்’.

இந்நிலையில், ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட காலை 10.30 மணிக்கு பேரணியாக கிளம்பிய ஒரு லட்சத்திற்கும் மேலான விவசாயிகளை நாடாளுமன்ற காவல் நிலையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர், போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், விவசாயிகள் நாடாளுமன்ற சாலை வழியாக பேரணியாக சென்றனர்.

அகில இந்திய விவசாயி சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தேசிய பொது செயலாளர் ஆஷிஷ் இதுகுறித்து பேசுகையில்,

“24 மாநிலங்களைச் சேர்ந்த 207 விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள், விவசாய தொழிலாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தலைநகர் டெல்லியில் அதிகளவில் விவசாயிகள் கலந்து கொண்ட பேரணி இதுவேயாகும்’’ என்றார்.

விவசாயிகள் போராட்டத்தால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. 3500க்கும் மேற்பட்ட போலீசார் ராம்லீலா மைதானம் முதல் நாடாளுமன்றம் வரை பணியில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.