Gaja Cyclone Relief
Gaja Cyclone Relief

Gaja Cyclone Relief  – சென்னை: ‘கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்ய, நிவாரணப் பணிகளுக்கு ரூ.1,401 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக வருவாய் துறை’ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 16-ம் தேதி, வங்கக்கடலில் உருவான கஜா புயல், நாகப்பட்டினம் – வேதாரண்யம் இடையே கரையை கடந்தது.

இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

மேலும் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் , காரைக்குடி ஆகிய மாவட்டங்கள் முற்றிலும் சேதமடைந்தன.

இந்நிலையில் புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் இன்று அறிக்கை மனு தாக்கல் ஒன்றை செய்தது. அதில் “கஜா புயல் பாதித்த நாகை, புதுக்கோட்டை,காரைக்குடி,திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு உதவி கலெக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடக்கிறது.

இந்நிலையில், நிவாரண பணிகளுக்கு ரூ.1,401 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 12-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதற்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “கஜா புயல் பாதிப்புக்கான இடைக்கால நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு 353.70 கோடி வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் கடந்த நவம்பர் 30-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.

இதில் தமிழகத்திற்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் மத்திய அரசின் பங்காக 2வது தவணையாக 2018-19ம் ஆண்டுக்கு 353.70 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிதி தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடைக்கால நிவாரணமாக வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.