செம - திரை விமர்சனம்

May 25, 2018


ஜீ.வி.பிரகாஷ் குமார் - அர்த்தனாபினு ஜோடியுடன் காயத்ரி, யோகி பாபு, ஜனா, கோவை சரளா, மன்சூர் அலிகான், "பசங்க" சுஜாதா உள்ளிட்டோர் நடிக்க பசங்க புரொடக்ஷன்ஸ் - பாண்டிராஜ், லிங்க பைரவி பி.ரவிச்சந்திரன், ராக் போர்ட் டி.முருகானந்தம் மூவரும் இணைந்து தயாரித்து, வழங்கி, வெளியிட, பிரதீப். ஈ.ராகவ் படத்தொகுப்பில், எம்.சி. விவேக்கானந்தன் ஒளிப்பதில் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையில் வள்ளிகாந்த் இயக்கத்தில் வந்திருக்கும் படம் தான் "செம".


sema review
Sema Tamil Review


லோடு ஆட்டோவில் வைத்து கூவி கூவி கூறுகட்டிய காய்கறியை விற்கும் இளைஞர் என்பதால் ஏரியாவில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஏற்ற "சுமார் மூஞ்சி குமார்" பெண் கூட கிடைக்க மாட்டேன் என்கிறது. அதனால் வெக்ஸாகிப் போய் இருக்கின்றனர் அவரும், அவரது தாய்குலம் "பசங்க" சுஜாதாவும், கூடவே இருந்து கலாய்க்கிறது யோகி பாபு உள்ளிட்ட ஊரும் உறவும். இந்நிலையில், தேவதை மாதிரி இருக்கும் அர்த்தனாபினுவை அதிர்ஷ்டவசமாக பெண் பார்க்க போகும் ஜீ.வி அவர்தான் தன் மனைவி என முடிவு செய்கிறார். அர்த்தனாபினுவும், ஜீ.வி தான், தன் கணவர் என கனவில் லயிக்க, அர்த்தனாவின் கடன்கார அப்பன் மன்சூரலிகானால் இவர்களது கல்யாணம் நடக்காமல் இழுக்கிறது. தடை பல கடந்து ஜீ .வி, அர்த்தனா வை தன் தாரமாக்கினாரா? இல்லையா..? என்பது தான் "செம" படத்தின் கதையும் களமும்!

ரொம்ப நாளைக்கப் புறம், இரட்டை அர்த்த வசனங்கள், கெட்ட கெட்ட கை கால் அசைவுகள் செய்கைகள்.... இப்படி எதுவுமில்லாமல் ஜீ.வி.பிரகாஷ் குமார் நடித்து வெளிவந்திருக்கும் படம் என்பதற்காகவே "செம" படத்தை செம்'ம யாக கொண்டாடலாம்.

"பொண்ணுங்க இருக்கற இடத்துல தான் அவன் இருப்பான்..... அவனசுத்தி பொண்ணுங்கள்லாம் இருப்பாங்க...." எனும் ஓப்பனிங் பில் - டப்புடன் எண்ட்ரி கொடுக்கும், குழந்தை எனும் குழந்தைவேலு வாக ஜீ.வி.பிரகாஷ்குமார், தன் முந்தைய படங்களைக் காட்டிலும் நடிப்பில் ரொம்ப தேர்ச்சி பெற்றிருக்கிறார். வாவ், வாழ்த்துக்கள் ஜீ.வி.

மகிழினியாக தஞ்சை பக்கத்து நெஞ்சை அள்ளும் பேரழகியாக அறிமுகம் அர்த்தனாபினு அசத்தல் புதுமுகம்.

"வா ராஞ்சிதா நித்யானந்தா எப்படி இருக்காரு?" "ஆண்டவன் நல்ல நல்லவங்களை தான் சோதிப்பான். அதான் மச்சி உன்னை ஏன் சோதிக்கிறான்னு... கேட்கிறேன். "போன்ற "பன்ச்" கள் மூலம் காமெடியன் யோகி பாபு, வழக்கம் போலவே ஒம குண்டம் எனும் பாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் கலக்கி.


Sema Movie Review


மற்றபடி, காயத்ரி யாக வரும் காயத்ரி, ஜெமினி கணேசனா கவரும் ஜனா, அர்த்தனாவின் ஜாலி அம்மா அந்தி மந்தாரையாக வரும் கோவை சரளா, அடாவடி அப்பா அட்டாக் பாலு வாக மன்சூர் அலிகான், ஜீ.வி.யின் அம்மா ஆரவல்லியாக வரும் "பசங்க" சுஜாதா உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பக்காவாக நடித்துள்ளனர்.

பிரதீப். ஈ.ராகவ் படத்தொகுப்பில், பெரிய குறையொன்றுமில்லை. எம்.சி. விவேக்கானந்தன் ஒளிப்பதில் ஜீ.வி யும் ஜொலிக்கிறார்.


ஜீவி பிரகாஷ் குமார் இசையில் "ஏய் உருட்டு கண்ணா ல... ", "சண்டாளி...", "நெஞ்சு....." உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் பிரமாதம்!

அறிமுக இயக்குனர் வள்ளிகாந்த் தனது எழுத்து, இயக்கத்தில், "பெங்களுர் தக்காளி இருக்கா? ன்னு கேட்கும் பெண் கஷ்டமரிடம் "தண்ணி தராத ஊருல இருந்துல்லாம் தக்காளி வாங்கறதுல்ல....", "எம்எல்ஏ இருக்காரா? அவரு கூவத்தூரு போயிருக்காருண்ணே...." என காதல் படத்திலும் அரசியல் பேசும் வசன பன்ச்களும், அட்டாக் பாலுன்னா ஏதோ யாரையோ அட்டாக் பண்ணியதால் வந்த பெயரல்ல.... 2 முறை அவருக்கு ஹார்ட் அட்டாக் அதான் பேரு அட்டாக் பாலு எனும் நக்கல் நையாண்டி வசனங்களிலும் காட்டியிருக்கும் அதீத ஈடுபாடு காட்டியிருக்கும் இயக்குனர், அதில் இன்னும் கொஞ்சம் குறைத்து புது மாதிரி காட்சி அமைப்புகளில் மேலும் கவனம் சேர்த்து காட்டியிருந்தார் என்றால், "செம' இன்னும் "செம 'யாய் - ரசிகனுக்கு நெருக்கமான உண்மையாய் இருந்திருக்கும்! இனித்திருக்கும்!

Rating: 3/5
Latest