"கொடிவீரன்" - திரை விமர்சனம்

December 7, 2017


தனது "கம்பெனி புரொடக்ஷன்ஸ்" பேனரில் சசிகுமாரே தயாரித்து, கதாநாயகராகவும் நடிக்க "குட்டி புலி", "கொம்பன்", "மருது" ஆகிய படங்களை இயக்கிய முத்தையாவின் எழுத்து, இயக்கத்தில், வெளி வந்திருக்கும் ஜனரஞ்சக படம் தான் "கொடிவீரன்."

தன் தங்கை மீது உயிரையே வைத்தபடி, அநீதிக்கு எதிராக பொங்கி எழுந்து, நல்லதையே நினைத்து, நல்லதையே செய்யும் நாயகருக்கும், அவரை மாதிரியே, தன் தங்கை மீதும் தன் தங்கை குடும்பத்தின் மீதும் உயிரையே வைத்தபடி நீதிக்கும், நேர்மைக்கும் எதிராக அநீதிக்கு ஆதரவாக செயல்படும் வில்லனுக்கும் இடையில் ஏற்படும் முட்டலும், மோதலும் தான் "கொடிவீரன்." படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல்.... எல்லாம்.

கொடிவீரனாக சசிகுமார், வழக்கம் போலவே வாழ்ந்திருக்கிறார். கதைப்படி, சாமியாடியாகவும், சண்டியராகவும், சம்சாரியாகவும் சசி செம பர்பாமென்ட்ஸ் காட்டியிருக்கிறார் சபாஷ்!


kodiveeran
Kodiveeran Movie Tamil Review


மற்றொரு நாயகர் விதார்த்தும் நேர்மையான ஆர்டிஓ சுபாஷ் சந்திர போஸாக தன் பங்கிற்கு மிரட்டியிருக்கிறார்.

மலர் கொடியாக மஹீமா நம்பியார், வேல்விழியாக பூர்ணா, பார்வதியாக சனுஷா ஆகிய மூன்று நாயகியரும், நாயகியராகவும் சரி பாசமிகு தங்கைகளாகவும் படத்திற்கு பலம் கூட்டியிருக்கின்றனர்.

காமெடியுடன் குணசித்திரமும் கலந்து வழங்கியுள்ள பாலசரவணன், வில்லன் வில்லங்கம் வெள்ளைக்காரனாக பசுபதி, அவரது மைத்துனர் அதிகார பாண்டியனாக இந்தர்குமார், துரையாக விக்ரம் சுகுமாறன், கல்யாணபுரோக்கராக வந்து கலகலப்பூட்டும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், நாயகரின் தாய் மாமன் மாயக்கண்ணன் - சக்தி சரவணன், உள் ளிட்ட எல்லோரும் கச்சிதம்.


Kodiveeran Movie English Review


சூப்பர் சுப்பராயன், திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன் மாஸ்டர்களின் சண்டை காட்சிகள் மிரட்டல் அதிரடி., வெங்கட்ராஜனின் படத்தொகுப்பில் படத்தின் நீளம் இன்னும் சற்றே குறைக்கப்பட்டிருக்கலாம்,

S.R.கதிரின் ஒளிப்பதிவில் சசிகுமார் படங்களுக்கே உரியகிராமியமனம் கமழுகிறது. சபாஷ்!

N.R.ரகுநந்தனின் இசையில் "அய்யோ அடி ஆத்தே..." , "ரக ரகளை டா..." உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் படத்தோட ரசிகனை பிரமாதமாய் ஒன்ற விடுகின்றன.

முத்தைய்யாவின் எழுத்து இயக்கத்தில் அவரது படங்களுக்கே உரிய கிராமிய மணமும், மண்வாசனையும் இப்படத்திற்கும் பலம் சேர்த்திருக்கின்றன.


மேலும், "நம்ம கும்புடுற சாமி அது அது இரண்டு இரண்டு பொண்டாட்டி வச்சிட்டிருக்கு..... நான் வச்சிருந்தா தப்பா?", ",அநியாயம் நடக்குற இடத்துல கண்ணன் வர்றாரோ இல்லையோ.... எங்க அண்ணன் வருவாரு....", "சாமி இருக்கிற இடத்துல தான் சப்பரமும் இருக்கும் ஜனங்களும் இருப்பாங்க... ", "என்ன மாப்பிள்ளை நம்ம இனத்தோட அடையாளமா, இல்ல மாமா உங்க குணத்தோட அடையாளம்...." "நாம நினைச்ச விஷயம் நடக்குதோ இல்லையோ, நினைக்கும் போதவது நடக்குணும்ல....", "இவனுக்கா, இந்த சாங்கு இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதன் இமான் இளைச் சட்டார் போல... " என்பது போன்ற "பன்ச்" டயலாக்குகள் எல்லாம் படத்திற்கு பெரும் பலம்!

ஆக மொத்தத்தில், "கொடிவீரன்' - 'வெள்ளித்திரையில் வெற்றி உலா வருவான்!"

Rating: 3/5