இலை - திரைவிமர்சனம்

April 21, 2017


'லீப் புரடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல்' சுஜித் ஸ்டெபானோஸ், தயாரிப்பு மற்றும் நாயக நடிப்பில், புதுமுகம் சுவாதி நாராயணன் நாயகியாக நடிக்க, ஆஞ்சல் சந்தோஷ் ஓளிப்பதிவில், விஷ்ணு வி.திவாகரன் இசையில், பினிஷ்ராஜ் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம் தான் "இலை".

தமிழகமெங்கும் 'ஆக் ஷன் - ரியாக்ஷன்' ஜெனிஷ், பிரமாண்டமாய் வெளியீடு செய்திருக்கிறார்.


ilai movie review
Ilai Review


கதைப்படி, பெண்களை படிக்க வைக்க விரும்பாத திருநெல்லி கிராமத்தில் வாழ்ந்துவரும் நாயகி சுவாதிநாராயணன், நன்றாக படித்து சமூகத்தில் சாதிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு இருக்கிறார். மகளின் லட்சியத்திற்கு அவரது ஆசை தந்தையும் பக்கபலமாக இருந்து வருகிறார்.

ஆனால், நாயகியின் தாய்க்கு, இதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. அதே நேரத்தில் தனது தம்பியும் நாயகியின் தாய்மாமனுமான ஸ்டெபானோஸ்க்கு, நாயகியை மணம் முடித்து வைத்துவிட்டால் போதும் என்று நினைக்கிறார்.

சுவாதி நாராயணன் படிக்கும் அதே பள்ளியில் படிக்கும் இன்னொரு மாணவியின் பண்ணையார் அப்பா, தனது மகள் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்பதற்காக சுவாதியை தேர்வுக்கு வரவிடாமல் தடுக்க பல சதி வேலைகள் செய்கிறார்.

மற்றொரு பக்கத்தில் சுவாதி பெரிய படிப்பு படித்து விட்டால், தனக்கு கிடைக்காமல் போய் விடுவாரோ? என்ற எண்ணத்தில் அவருடைய படிப்புக்கு தடை போடும் வகையில் பல்வேறு வேலைகளை பண்ணையாருடன் சேர்ந்து செய்து வருகிறார். இதையெல்லாம் தாண்டி சுவாதி பத்தாங் கிளாஸ் தேர்வுஎழுதினாரா? இல்லையா..? என்பது தான் "இலை" படத்தின் மீதிக்கதை.

"இலை" எனும் டைட்டில் கதாபாத்திரத்தில் வரும் நாயகி சுவாதி நாராயணன் முழு படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கிறார். படிப்புக்காக போராடும் மாணவியாக அம்மணி நடிப்பிலும் போராடி நன்றாக நடித்திருக்கிறார்.


Ilai Tamil Movie Review


படத்தில் நாயகி சுவாதியை ரொம்பவும் ஓட வைத்திருக்கிறார்கள். தனது படிப்புக்கு பக்கபலமாக இருக்கும் தன் தந்தை, உயிருக்கு போராடும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, தந்தையின் ஆசையை தனது லட்சிய த்தை நிறைவேற்ற தேர்வு எழுத செல்லும் சுவாதிக்கு ஏற்படும் தடங்கல்களை எதிர்கொள்ளும் காட்சிகளில் எல்லாம் 'உச்'க் கொட்ட வைக்கிறார்.

நாயகியின் முறைமாமனாக மணிகண்டனாக வரும் சுஜித் ஸ்டெபானோஸ், தன் அக்கா மகளான நாயகி இலைக்கு தாலி கட்டுவது ஒன்றையே லட்சியமாகக் கொண்டு, அதற்கு இடைஞ்சலாக இருக்கும் இலையின் அப்பாவையே தீர்த்து கட்ட களமிறங்கும் சுஜித் ஸ்டெபானோஸ், எக்குத்தப்பான தோறத்துடன் என்னமாய் நடித்திருக்கிறார்? வாவ்!

இலையின் விவசாயி அப்பா மாரிமுத்தாக டாக்டர் கிங்மோகன், பிரமாதமாக நடித்திருக்கிறார், பாதியில் மகளை அம்போ என விட்டுப் போகும் போது ரசிகனை அய்யோ என அலறவைக்கிறார்.

நாயகியின் தாய் ராமாயியாக வரும் மலையாள நடிகை ஸ்ரீதேவி அனில், மல்லி அக்கா - தேவு, கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம், காவ்யா, நாயகியின் தம்பி அன்பாக வரும் அஸ்வின் சிவா, குட்டித் தங்கை பேபி ஜினியா, அந்த பிட் மாணவி சித்ரா, மகளின் கெளரவத்திற்காக எதையும் செய்யும் அவரது பண்ணையார் அப்பா.. என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சரியான தேர்வு. அவர்களும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

"மலைக்கு போனாலும் மதகடி போனாலும் மச்சானோட துணை வேணும் பாங்க..", "உலகத்தின் இருள் எல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஒரு சின்ன தீக்குச்சியின் வெளிச்சத்தை மறைக்க முடியாது. "உள்ளிட்ட வேலுமணியின் நச் - டச் வசனங்களுக்காக அவரை பாராட்டலாம்.


சந்தோஷ் அஞ்சலின் ஒளிப்பதிவு பசுமையாக, பக்காவாக இருக்கிறது. படத்தில் விஷுவல் எபெக்ட்ஸ்அதிகம் இடம் பெற்றிருக்கிறது. இருப்பினும், அது தெரியாமல் ரொம்பவும் யதார்த்தமாக இருப்பது போல் தெரிகிறது.

விஷ்ணு வி.திவாகரனின் இசையில், "இலை...", "என் ஆச அப்பாவே..." உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் சுபராகம்.

பினிஷ் ராஜின் எழுத்து, இயக்கத்தில், ஒரு காலத்தில், கிராமங்களில் கல்வி கற்பதற்கு வசதியில்லாமல் இருக்கும் குழந்தைகள் கல்விக்காக எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை இப்படத்தில் இயக்குனர் அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார். இன்றைய காலகட்டத்திலும் கிராமங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த படம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பலாம்.

ஆனால், அதே நேரம், கிராமத்தில் குழந்தையை கொஞ்ச நேரம் தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளக் கூட ஆள் கிடைக்கவில்லை.. என இயக்குனர் காட்சிப்படுத்தியிருப்பது நம்ப முடியாத பெரும் பலவீனம். குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு சொல்ல வந்த கருத்தை இயக்குனர் பீனிஸ் ராஜ் அழகாக, என்ன கொஞ்சம் நீள நீளமாக சொல்லியிருக்கிறார்.

ஒவ்வொரு தடையும் தாண்டி நாயகி பத்தாங் கிளாஸ் இறுதி நாள் தேர்வு எழுதுவாரா? என்று படம் முழுவதும் பரபரப்பு பயணிக்கிறது. என்றாலும், அந்த காட்சிகளின் நீளம் பார்ப்பவர்களுக்கு சற்று பொறுமையைசோதிக்கிறது. மற்றபடி, இயக்குனரின் இந்த வித்தியாச முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும். வாழ்த்துக்கள் கீப் இட் அப் டைரக்டர் பினிஷ் ராஜ்.

ஆக மொத்தத்தில் ‘இலை’ இந்த கோடைக்கு இதமாக வந்திருக்கும் பசுமை.யான கலை படைப்பு! எல்லோரும் பார்க்கலாம் ஒரு ட்ரிப்பு!