சென்னையில் ஒரு நாள் - 2 - திரை விமர்சனம்

October 19, 2017


"கல்பதரு பிக்சர்ஸ்" பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் ஜே.பி.ஆர் எழுத்து, இயக்கத்தில் சரத்குமார், நெப்போலியன், சுஹாசினி, உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களுடன் நிறைய புதுமுக நட்சத்திரங்களும் நடிக்க சஸ்பென்ஸ், க்ரைம், த்ரில்லராக வெளிவந்திருக்கும் படம் தான் "சென்னையில் ஒரு நாள் - 2".

போன, "சென்னையில் ஒரு நாள்" பகுதி 1-ல் சென்னையில் போலீஸ் அதிகாரியாக செயற்கரிய காரியங்கள் பல செய்த சரத்குமார், இந்த பகுதி-2 ல் ஆரம்ப காட்சியிலேயே கோயம்புத்தூருக்கு, பணி இட மாற்றம் செய்யப்படுகிறார். அங்கு, விபத்தில் திடீர் மரணம் தழுவிய தன்னுடைய மாமாவின் பிள்ளைகளான மகன் மற்றும் மகள்களை வளர்த்தபடி போலீஸ் பணி செய்துவருகிறார். இச்சூழலில் அதில் ஒரு பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது.

இந்நிலையில், கோயம்புத்தூரில் ஜூலியின் கொலை இன்றா? நாளையா? என்று போஸ்டர்கள் சஸ்பென்சாக ஒட்டப்படுகிறது. இதையறிந்த சிட்டி கமிஷனர் நெப்போலியன், அது பற்றி விசாரிக்க சொல்லி சரத்குமாரிடம் அந்த கேஸை ஒப்படைக்கிறார். உடனடியாக சரத்குமாரும் இந்த கேசைவிசாரிக்க ஆரம்பிக்கிறார்.


chennaiyil oru naal 2
Chennaiyil Oru Naal 2 Review


அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. மேலும், சரத்குமாருக்கு தான் வளர்த்து வரும் மூன்று பிள்ளைகளையும் கொன்று விடுவதாக மிரட்டல்வருகிறது. இறுதியில், இதன் பின்னணியில் இருப்பவர்களை
சரத்குமார் எப்படி கண்டுபிடிக்கிறார்? அந்த ஜுலி கொலை புதிர் போஸ்டருக்கும் சரத் மாமா குடும்பத்திற்குமான சம்பந்தம் என்ன? கொலையாளிகளின் நோக்கம் தான் என்ன? என்பதை சஸ்பென் சாகவும் திகிலாகவும் சொல்லியிருக்கிறது சென்னையில் ஒரு நாள்- 2 படத்தின் மீதிக்கதையும், களமும்.

படத்தின் கதாநாயகராக, போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கிறார் சரத்குமார். தனக்கே உரிய பாணியில் சிறப்பாக நடித்து அசத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் போலீஸ் வேடத்தில் நடிப்பது என்பது சரத்குமாருக்கு கைவந்த கலை என்பதால் மிடுக்கான தோற்றத்துடன் கம்பீரமாக நடித்திருக்கிறார், சரத்குமார்.


Chennaiyil Oru Naal 2 Tamil Review


அதேபோன்று, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நெப்போலியன், ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கன்னியாஸ்திரியாக நடித்திருக்கும் சுஹாசினி, சிறப்பு. சரத்குமாருக்கு போலீஸ் டிரைவராக வரும் முனிஸ்காந்த் ராமதாஸ், சிரிப்பு, சிறப்பு!

ராஜசேகரின் படத்தொகுப்பும் சோலை அன்புவின் கலை இயக்கமும் படத்திற்கு பெரும் பலம்.

இப்படத்தில் இடம் பிடித்திருக்கும் பெரும் பாலான காட்சிகளை இருட்டிலேயே படமாக்கி இருப்பதால் விஜய் தீபக்கின் ஒளிப்பதிவு திறமையை அதிகமாக கண்டுணர முடியவில்லை.

புதியவர் ஜேம்ஸ் பிஜாய்யின் இசையில் பின்னணி இசை அளவிற்கு பாடல்கள் இல்லாதது சற்றே குறை!

சென்னையில் ஒரு நாள் படத்தின்வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக இந்த சென்னையில் ஒரு நாள் - 2 படம் வெளியாகி உள்ளது.


கிரைம் திரில்லர் கதையை மிகவும் விறுவிறுப்புடன் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஜே.பி.ஆர்.. சுவாரஸ்யமான கதை என்றாலும் திரைக்கதையில் க்ரைம் மற்றும் சஸ்பென்ஸ் சப்ஜெக்ட்டுக்கான விறுவிறுப்பு சற்றே குறைவு. மற்றபடி கதாபாத்திரங்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.ஜே.பி.ஆர் என்றால் மிகையல்ல...

.

ஆக மொத்தத்தில், கோவையில் ஒரு நாளாக கதை சொல்லப்பட்டிருக்கும் "சென்னையில் ஒருநாள் -2’., 'சென்னையில் ஒரு நாள்' அளவுக்கு இல்லை.... என்றாலும்... தினுசு, தினுசாக சஸ்பென்ஸு மற்றும், புதுசு விரும்பும் இளசுகளுக்கு பெரிசு! சரியான பரிசு!"
Latest